விழுப்புரம்: விழுப்புரத்தை சார்ந்த அரசு உதவிபெறும் பள்ளி மாணவி, மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான தடகள போட்டியில் நூறு மீட்டரை 1நிமிடம் 02 வினாடியில் கடந்து தங்கப் பதக்கம் வென்ற மாணவிக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


விழுப்புரம் அருகேயுள்ள சாலை அகரத்தில் மளிகை கடை நடத்தி வரும் ராஜரத்தினம் பூங்கொடி அவர்களின் மாற்றுதிறனாளி மகள் சுபஸ்ரீ அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். மாற்றுதிறனாளி மாணவியான சுபஸ்ரீ ஓட்டப்பந்தய வீராங்கனையாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்று வருகின்ற நிலையில் கடந்த 15 முதல் 17 ஆம் தேதி வரை மத்திய பிரதேசத்தில் மூன்று நாட்கள் தேசிய அளவில் நடைபெற்ற காது கேளாதோர், வாய்பேச முடியாதோர்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் தமிழகத்தின் சார்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி சுபஸ்ரீ கலந்து கொண்டார்.


ஓட்டப்பந்தய போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 15 வயது முதல் 18 வயதிற்குள்ளானவதிற்கான ஓட்ட பந்தய போட்டியில் சுபஸ்ரீ கலந்து கொண்டு நூறு மீட்டர் ஓட்ட பந்தயத்தில் நூறு மீட்டரை ஒரு நிமிடம் 02 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதேபோல நானூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடமும் நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடமும் வென்று அசத்தினார். இதனை தொடர்ந்து ரயில் மூலம் மத்திய பிரதேசத்திலிருந்து விழுப்புரம் வந்த மாணவிக்கு பூங்கொத்து கொடுத்து இன்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.