விழுப்புரம்: தனது கணவரிடம் எஸ்பி பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறி காவல் ஆய்வாளரின் மனைவி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள சூரப்பட்டை சேர்ந்தவர் ராஜா. கடந்த 23-ந் தேதி இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் இவரது தற்கொலைக்கு காரணமான அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி, மோகன் ஆகியோரை கைது செய்யக்கோரி ராஜாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி, மோகன் ஆகிய இருவரையும் கைது செய்தபோது ராஜாவின் தற்கொலையின் திருப்பமாக விழுப்புரத்தை சேர்ந்த அனன்யா என்ற திருநங்கை கடந்த 25-ந் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவர் தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ராஜாவும், அனன்யாவும் காதலித்து வந்த விவகாரம் ராஜாவின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்ததால் ராஜா தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் மனமுடைந்த அனன்யா தற்கொலைக்கு முயன்றதாகவும் சக திருநங்கைகள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் வாலிபர் ராஜா தற்கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமலும், மெத்தனமாக செயல்பட்டதாகவும் கூறி கெடார் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சுதா ஆகிய இருவரையும் துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து டிஜஜி பாண்டியன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த 31-ந் தேதி நள்ளிரவு காவல் ஆய்வாளர் ஜெய்சங்கரின் மனைவியும் வழக்கறிஞருமான சரஸ்வதி. எஸ்பி அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது உயர் அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கையால் எனது கணவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியவாறு தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கரின் மனைவி சரஸ்வதி மீண்டும் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு விழுப்புரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாத்திரை உட்கொள்வதற்கு முன் காவல் ஆய்வாளரின் மனைவி டிஐஜி பாண்டியனுக்கு என் இறப்பிற்கு எஸ்பி ஸ்ரீநாதாதான் காரணம், என் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்