புதுச்சேரியில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 44 விபத்துகள் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது 47 பேர் காயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட கிறிஸ்துமஸ் முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்தனர்.


ஒரே நாளில் 44 விபத்துகள்:


சுற்றுலா பயணிகளின் வருகையில் புதுவை நகரமே ஸ்தம்பித்தது. புதுவையில் சாதாரண விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை அனைத்தும் நிரம்பி வழிந்தன. ரூ.700 கட்டணம் வசூலித்த விடுதிகள் கூட ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்தன. பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து புத்தாண்டை கொண்டாட குடும்பத்தோடு வந்திருந்தனர். நள்ளிரவில் கடற்கரையில் கூடிய கூட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைக்கும் சூழல் ஏற்பட்டது. கடற்கரையில் கூடிய மக்கள் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக வெளியேறியதால் நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உருவானது.


மது போதையாலும் இளைஞர்கள் வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதனால் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டது. நகர பகுதியில் மட்டும் 28 விபத்துகளில் 31 பேர் காயமடைந்தனர். 10 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். 21 பேர் லேசான காயத்துடன் வீடு திரும்பினர். கதிர்காமம், மேட்டுப்பாளையம், கோரிமேட்டில் 8 விபத்துகளில் 8 பேர் காயமடைந்தனர். ஒருவர் ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். வில்லியனூர் சுற்று வட்டார பகுதியில் 4 விபத்துகள், கிருமாம்பாக்கத்தில் 4 விபத்துகளில் 8 பேர் காயடைந்தனர். மொத்தம் 44 விபத்துகளில் 47 பேர் காயமடைந்தனர். நேற்று அதிகாலை வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் தொடர்ந்தது.


அலைமோதிய கூட்டம்:


நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் புதிய பேருந்து  நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. சென்னை, திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு பயணிகள் அதிகளவில் காத்திருந்தனர். சென்னை பஸ்களில் முண்டியடித்து ஏறி இடம் பிடித்து சென்றனர். புதுவைக்கு காரில் வந்தவர்களும் புறப்பட்டதால் மொரட்டாண்டி சுங்கசாவடி  வாகனங்கள் அணிவகுத்து நின்றது. புதுவை மாநில எல்லைகள் நேற்று மாலை முதல் இரவு வரை நெரிசலாக இருந்தது. புத்தாண்டு தினமான நேற்று புதுவை நேணாங்குப்பத்தில் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகு சவாரி செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் படகு குழாமிற்கு ரூ.15 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.


தாவரவியல் பூங்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,500 பேர் சிறுவர் ரெயிலில் பயணித்துள்ளனர். புத்தாண்டையொட்டி நேற்று மதியம் ஓட்டல்களில் கூட்டம் அலைமோதியது.நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண ஓட்டல்கள் வரை உணவருந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாலை 4 மணி வரை மதிய உணவுக்காக காத்திருந்து சாப்பிட்ட பின் சுற்றுலா பயணிகள் புதுவையிலிருந்து கிளம்பிச் சென்றனர். புதுவைக்கு வந்திருந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கிளம்பிச்சென்றதால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நிறைவு பெற்று இயல்பு நிலை திரும்பியுள்ளது. புத்தாண்டு ஒரே நாளில் மொத்தம் 44 விபத்துகளில் 47 பேர் காயமடைந்தனர்.


 




என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.