விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்ததற்கு கிராம மக்கள் ஒன்றுதிரண்டு ஆசிரியர் மீது எந்த தவறுமில்லை விடுதலை செய்யக்கோரி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வாக்கூர் கிராமத்தில் செயல்பட்டும் வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் கருணாகரன் பள்ளியில் பயிலும் சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதன் பேரில், விழுப்பும் மகளிர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர். ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் இரண்டு தினங்களாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளனர்.
ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை என்றும் பள்ளி மாணவர்களை தட்டி கொடுத்து பாடம் சொல்லி கொடுப்பார் என்றும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்றால் வீட்டிற்கே வந்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவில்லை என கேட்டு அழைத்து செல்வார் என்றுக் கூறி ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி பெற்றோர்கள் கிராம மக்கள் பள்ளி மாணவர்களுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கிராம மக்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் வாயில் கதவினை பூட்டினர். இதனையடுத்து கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதையடுத்து ஆட்சியரிடம் மனு அளித்து செல்லுமாறு வலியுறுத்தினர்.
அதனை தொடர்ந்து கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு ஆசிரியரை விடுதலை செய்யும் வரை பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் என்றும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் சூழ்ச்சியால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.