விழுப்புரம்: மரக்காணம் அருகே உள்ள முருக்கேரி சிறுவாடி இணைப்பு சாலையில் தேங்கிய மழை நீரை அகற்றகோரி வணிகர்கள் மரக்காணம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு அணிவகுத்து நின்றன. 


சாலையில் தேங்கி நின்ற மழை நீர் 


தமிழகத்தில் பல்வேறு மாவட்டகளில் லேசான மழை அல்லது கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை விடுத்திருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வெப்பச்சலனம் காரணமாக இரவு முதல் அதிகாலை வரை அவ்வப்போது விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. இந்த குறைந்த மழைக்கே முருக்கேரி சிறுவாடி செல்லக்கூடிய சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. சாலையில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதியிலுள்ள வணிகர்களின் கடைகளுக்கு செல்வதற்கு பொதுமக்களும் வணிகர்களும் சிரமத்திற்குள்ளாகினர்.


வியாபாரிகள் சாலை மறியல்


சிறுமழைக்கே அவ்வப்பொழுது சாலையில் மழை நீர் தேங்குவதாகவும், மழை நீர் செல்லும் வாய்க்காலை அப்பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழை நீர் சாலையிலேயே தேங்குவதாக குற்றஞ்சாட்டி வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக திண்டிவனம் மரக்காணம் செல்ல கூடிய சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மழை நீர் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர். வணிகர்கள் மறியல் காரணமாக வாகனங்கள் சாலையில் அணிவகுத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்றன.