புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கடல் லேசான சீற்றத்துடன் காணப்படுகின்றது.


புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வபோது மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரி நகரப் பகுதியான கடற்கரை சாலை, உப்பளம், முத்தியால்பேட்டை, முதலியால்பேட்டை, புதிய பேருந்து நிலையம் மற்றும் கிராமப் பகுதிகளில் வில்லியனூர், பாகூர், திருக்கனூர், கன்னியகோவில், காலாப்பட்டு, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.


கோடை விடுமுறையில் புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மழையின் காரணமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் குடை பிடித்தபடி செல்கின்றனர்.


கடல் சீற்றம் 


லேசான கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரி கடற்கரை, ஆரோவில் கடற்கரை பகுதியில் கடலில் சுற்றுலாப் பயணிகள் இறங்க வேண்டாம் என போலீசார் தடை விதித்து கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வெளியேற்றி வருகின்றனர்.


17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:


தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று ஓரிரு மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது