விழுப்புரம் மாவட்டம் வளவலூரில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தின்கீழ், மெகா எண்ணெய் பனை நடவு திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் பனை நடவு செய்து துவக்கி வைத்தார்.


இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மைத்துறைக்கென்று தனிநிதிநிலை அறிக்கை வெளியிட்டு, பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், விவசாயிகளுக்கு இலாபம் தரக்கூடிய வகையிலும், தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ளும் வகையிலும் விவசாயப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் உயர்ந்த எண்ணத்தில் மானியத்துடன் கூடிய விவசாய கடனுதவிகளை வழங்கி வருவதோடு, பனை நடவு போன்ற விவசாயப்பணிகளை ஊக்குவித்து வருகிறார்.


மெகா எண்ணெய் பனை நடவு திருவிழா


அதனடிப்படையில், இன்றைய தினம், வளவனூரில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தின்கீழ், மெகா எண்ணெய் பனை நடவு திருவிழாவினை, பனை நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது.


தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய்ப் பனைத் திட்டமானது 2022-23-ம் ஆண்டு முதல் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிரான எண்ணெய் பனை சுமார் 270 ஹெக்டர் அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி, மயிலம், கோலியனூர், கண்டமங்கலம், மரக்காணம், முகையூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் வானூர் ஆகிய வட்டாரங்கள் எண்ணெய் பனையை அதிகம் சாகுபடி செய்யும் வட்டாரங்களாகும்.


100 சதவீத மானியத்தில் வயல்வெளிக்கே சென்று வழங்குவதற்கு ஏற்பாடு!


எண்ணெய்ப் பனை சாகுபடியினை ஊக்குவித்திட தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு கோத்ரேஜ் அக்ரோவட் லிமிட் நிறுவனத்தின் மூலம் எண்ணைய்ப் பனை கன்றுகளை 100 சதவீத மானியத்தில் வயல்வெளிக்கே சென்று வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய்ப் பனை சாகுபடியில் முதல் 4 ஆண்டுகள் வரை பராமரிப்பிற்கு ஒரு எக்டேருக்கு ரூ.5.250/- மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்வதற்கு ரூ 5.250/- ஆக மொத்தம் ரூ.10,500/- மானியமாக வழங்கப்படுகிறது.


இயந்திரங்களுக்கு 50 சதவீதம் மானியம்


எண்ணெய்ப் பனை சாகுபடி செய்வதற்கு டீசல்/மின்சாதன பம்பு செட்கள் மற்றும் ஆழ்துளைக்கிணறு அமைத்தல், நடவு செய்த எண்ணெய்ப் பனை கன்றுகளை பாதுகாப்பதற்கு கம்பிவலை, எண்ணெய்ப்பனை அறுவடை இயந்திரம். பழக்குலை வெட்டும் கருவி, இலை வெட்டும் கருவி. சிறிய அளவிலான அலுமினிய ஏணி, சிறிய உழுவை இயந்திரம் ஆகியவற்றை பெறுவதற்கு இத்திட்டத்தின் மூலம் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.


மேலும் எண்ணெய்ப் பனை பழக்குலைக்கான உத்திரவாத கொள்முதல் விலையானது ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசால் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏப்ரல் 2022 முதல் அறுவடை செய்யப்பட்ட எண்ணெய்ப் பனை பழக்குலைக்கான விலை தோட்டக்கலை துறையினால் நிர்ணயம் செய்யப்பட்டு அத்தொகையினை 15 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைத்திட அரசு வழிவகை செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 மற்றும் அதற்கு மேல் வயதுடைய எண்ணெய்ப் பனையிலிருந்து 8 செட்ரிக் டன்னிற்கு மேல் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பழக்குலைகளுக்கு ரூ 1.000/மெ.டன் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.


விவசாயத்தில் புதுவித முயற்சி


பாமாயில் மரத்தின் வயதின் அடிப்படையில், 3 முதல் 4 வருடம் வரை 5 டன்களும், 4 முதல் 5 வருடம் வரை 12 டன்களும், 5 முதல் 6 வருடம் வரை 25 டன்களும், 6 முதல் 30 வருடம் வரை 30 டன்கள் மகசூல் கிடைக்க வாய்ப்புண்டு. 6-ஆம் ஆண்டிலிருந்து எக்டருக்கு சராசரியாக 42 டன் மகசூல் கிடைக்கும். இதன் மூலம், ஆண்டொன்றுக்கு சராசரியாக ரூ.5,75,000/- வருமானம் கிடைக்கும். எனவே, விவசாயிகள் இதுபோன்று இலாபம் தரக்கூடிய விவசாயப்பணிகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டிட வேண்டும். இதன் மூலம், தங்களின் வாழ்வாதாரம் உயர்வதோடு, விவசாயத்தில் புதுவித முயற்சிகளும் உருவாகும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை சார்பில், 11 பயனாளிகளுக்கு ரூ.60,000/- மதிப்பீட்டில் கொய்யா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை மற்றும் வெண்டை போன்ற மரக்கன்றுகளும், சிப்பம் கட்டும் அறை, நீர் சேகரிப்பு அமைப்புகள் அமைப்பதற்கான ஆணைகளை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சச்சிதாநந்தம், வேளாண்மை இணை இயக்குநர் இரா.சினீவாசன், தோட்டக்கலை துணை இயக்குநர் கு.அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எ.பிரேமலதா, தோட்டக்கலை உதவி இயக்குநர் வெங்கடேசன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.