விழுப்புரம்: விழுப்புரத்தில் பாஜக கொடிக் கம்பத்தில் தேசிய கொடியேற்றி ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
பாஜக கொடிக்கம்பத்தில் தேசிய கொடி
நாட்டின் 78வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் வரை தேசிய கொடியேந்தி இருசக்கர வாகனப் பேரணி நடைபெற இருந்தது. ஆனால் பாஜவின் இருசக்கர வாகனப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், தடையை மீறி பேரணி செல்ல தயாரான பாஜகவினர், விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கலிவரதன், இளைஞர் சங்கத்தலைவர் சுரேஷ் தலைமையில் பாஜக கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
பேரணி செல்ல முயன்ற 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது
பின்னர் ஊர்வலமாக பேரணி செல்ல முயன்ற 30க்கும் மேற்பட்ட பாஜகவினரை துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்து 50 மீட்டர் தொலைவில் இருந்த திருமண மண்டபத்திற்கு பேருந்தில் அழைத்துச் சென்றனர்.
அப்போது 50 மீட்டர் தொலைவில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு நடக்க வைத்தே அழைத்து செல்லலாமே என போலீஸாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவ்வாறு அழைத்து சென்றால் அது ஊர்வலத்திற்கு அனுமதி தந்து போல் ஆகிவிடும் என்பதால் தான் பேருந்து மூலம் அழைத்துச் செல்கிறோம் என்று போலீஸார் கூறினர். இருப்பினும் பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.