விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பூதேரி பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் சந்தோஷ்குமார் (18), இவர் திண்டிவனம் பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் திண்டிவனம் சென்னை பேருந்து நிலையம் வந்து விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரயில்வே பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் வாகனம் தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகின்றது.


இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் சாலையை சரி செய்யாத அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை திட்டியதாக கூறப்படுகின்றது. அப்போது அங்கிருந்த கறிகடை உரிமையாளரும், திமுக நிர்வாகியுமான அபி (28) என்பவர் ஏன் சத்தம் போடுகிறாய் என்று தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த அபி என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் ஏற்க்கனவே மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து சந்தோஷின் இடது கையில் பலமாக குத்தியுள்ளார்.


இதனை தொடர்ந்து கத்தி தடுமாறி கீழே விழுந்ததால் அபி மீண்டும் ஓடிச்  சென்று அருகில் இருந்த சலூன் கடையிலிருந்து. ஷேவிங் செய்யும் கத்தியை எடுத்து வந்து மீண்டும் சந்தோஷை கழுத்துப் பகுதியில் கிழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அபியுடன் இருந்த அவரது ஆதரவாளர்கள் ஐந்து பேரும் சந்தோஷை பலமாக தாக்கி உள்ளனர். அப்போது பூதேரி பகுதியில் இருந்து வந்த புஷ்பராஜ் (20) என்பவர் சந்தோஷ்குமாரை ஒரு கும்பல் தாக்குவதை பார்த்து தடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த கும்பல் புஷ்பராஜை அடித்துள்ளனர். அடி தாங்க முடியாத அவர் அளரியடித்து அங்கிருந்து ஓடினார்.


இது குறித்து தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு சென்ற திண்டிவனம் போலீசார் சந்தோஷ் குமாரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சந்தோஷ்குமார் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் அடிப்படையில் இரண்டு வாலிபர்களிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டிவனம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.