விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கழிவறை திறக்கப்படாமல் உள்ளதால் பேருந்து பயணிகள், பேருந்து நிலைய முகப்பு வாயிலில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுவதால் கழிவறையை திறக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. 


விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்


தமிழகத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக உள்ளது விழுப்புரம் புதிய பேருந்து நிலையம். தென்மாவட்ட மக்களை ஒன்றிணைக்கும் இந்த பேருந்து நிலையத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி ,சென்னை, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்து மூலமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.


மக்கள் அதிகமானோர் நீண்ட துரத்தில் இருந்து பேருந்து மூலமாக பயணம் மேற்கொண்டு விழுப்புரம் பேருந்து நிலையம் வந்தவுடன் சிறுநீர் கழிப்பதற்காக பேருந்தில் இருந்து இறங்கினால் கழிவறை வசதி இல்லாததால் பெரும்பாலான ஆண்கள் திறந்த வெளியிலையே பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்கு அருகாமையிலையே சிறுநீர் கழித்துவிட்டு செல்கின்றனர். இதனால் விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வாயிலில் பேருந்துகள் நுழைந்தவுடன் நிறுத்தப்படும் இடம் துர்நாற்றம் வீசுவதால் பேருந்து பயணிகள் முகத்தை மூடியவாறும், ஆண்கள் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் முகம் சுழித்தவாறு செல்கின்றனர்.


ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கழிவறை


இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கழிவறையை திறக்கப்படாமல் உள்ளதால் கழிவறை உள்ள வாயில் பகுதியிலையே பயணிகள் சிறுநீர் கழித்துவிட்டும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு செல்கின்றனர். புதிய கழிவறை கட்டப்பட்ட முகப்பு வாயிலில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசும் அவலநிலை உள்ளது. எனவே புதிய கழிவறையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. புதிய கழிவறை திறக்கப்படாமல் உள்ளது குறித்து நகராட்சி ஆணையர் ரமேஷிடம் கேட்டபோது, நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் டெண்டர் விடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் விரைந்து டெண்டர் விடப்பட்டு கழிவறை திறக்கப்படுமென ஆணையர் தெரிவித்துள்ளார். 



தேங்கி நிற்கும் கழிவு நீர்


மேலும், இப்பேருந்து நிலையத்தில் உள்ள கால்வாய்கள் அனைத்து கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதால் பேருந்து நிலையத்திற்கு வருவோர் மூக்கை பிடித்தவாறே கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அங்குள்ள கடைகள் அனைத்து பயணிகள் நடந்து செல்லும் பாதசாலை, பயணிகள் காத்திருக்கும் இடம் என அனைத்தும் ஆக்கிரமித்து தேநீர் கடைகள், பழ கடைகள் என பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் அங்கு உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயங்கும் அலுவலகம் எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாத அளவிற்கு குப்பைகள், தேவையற்ற பொருட்களை சேமிக்கும் இடமாக மாற்றியுள்ளனர் கடைக்காரர்கள்.


உயிர்பலி வாங்கிய வாகனங்கள் 


வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையால் பறிமுதல் செயல்படும் விபத்துக்குள்ளான பேருந்துகள், கார்கள் ஆகியவைகளை பேருந்து நிலைய வாயிலில் நிற்க வைத்துள்ளதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த அச்சமடைகின்றனர். உயிர்களை பலி வாங்கிய வாகனங்களை பார்க்கும் போது அச்சமாக உள்ளதாகவும், பொது இடத்தில் அவற்றை நிறுத்தி வைத்திருப்பது தவறான செயலாகவும்,  மணல் லாரிகள், டாடா ஏசி,  சரக்கு வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறியுள்ளது விழுப்புரம் புதிய பேருந்து நிலையம். நாள் தோறும் இரவு, பகலாக ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த மிகப்பெரிய பேருந்து நிலையம் மக்களுக்கானதாக இல்லை என்பது மட்டும் நிதர்சனம்.