விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அரசு வழக்கறிஞரும் கிருஷ்ணன் நேற்று விழுப்புரம் தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பெறும் நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் உளுந்தூர்பேட்டை அதிமுக நகர செயலாளர் துரை, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு அழைப்பதாக தெரிவித்தார். நானும், மனைவியும் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு வீட்டுக்கு சென்ற போது பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருந்த போது குமரகுரு ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மனைவி கண் முன்னே கழுத்தை பிடித்து தள்ளினார் என கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து கிருஷ்ணன் கூறுகையில்...


நான் 32 ஆண்டுகளாக அதிமுக தீவிர தொண்டனாக இருக்கிறேன். 10 வருடங்களாக மாவட்ட வழக்கறிஞர் பிரிவினை செயலாளராகவும், 18 வருடம் இளைஞரணி செயலாளராகவும் தொடர்ந்து 28 ஆண்டுகளாக மாவட்ட பொறுப்பில் பணியாற்றி வருகிறேன். 2009, 2014இல் கொடநாட்டில் பார்லிமென்ட் நேர்காணலுக்காக ஜெயலலிதா என்னை தான் அழைத்தார்கள்.


2024 வரைக்கும் உனக்கு தான் சீட்டு என்றும் 10 கோடி ரூபாய் செலவு செய்து உன்னை  ஜெயிக்க வைப்பேன் என நம்பிக்கையூட்டி, என்னை இந்த இருபது வருடத்தில் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வைத்தார். இவ்வளவு செலவு செய்தும் மாவட்ட செயலாளர் பரிந்துரை செய்தும் ஏன் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என குமரகுருவுக்கும் எனக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.


'என்னடா பதில் சொல்ல வேண்டி இருக்கு' டென்ஷன் ஆனா குமரகுரு


உங்களை நம்பி தான் கட்சிக்கு செலவு செய்தேன் வந்தேன், என் குடும்பத்துக்கு ஏதாவது பதில் சொல்லுங்கள். இந்த இரண்டு வருடத்தில் நான் சம்பாதித்த அனைத்தும் கட்சிக்கு தான் செலவு செய்தேன், என் குடும்பத்திற்கு ஏதாவது செய்யுங்கள் எனவும் பதில் சொல்லுங்கள் எனக் கேட்டேன். அப்போது குமரகுரு அவர் வீட்டுக்கு வர சொன்னார். உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் துரை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது உங்களை நம்பி தானே நான் இவ்வளவு பணத்தை செலவு செய்தேன் எங்கள் குடும்பத்திற்கு ஏதாவது ஒரு பதில் சொல்லுங்கள் என்று கேட்டேன். அப்போது குமரகுரு ‘என்னடா பதில் சொல்ல வேண்டி இருக்கு’ நான் உன்னை ஒரு பைசா கூட செலவு பண்ண சொன்னது இல்லை என அசிங்கமா திட்டி கழுத்தை பிடித்து நெறித்தார். அப்பொழுது நகர செயலாளர் துரை தடுத்து நான் தானே கூப்பிட்டு வந்தேன் அவர் மீது கை வைக்காதீர்கள் என கூறினார்.


மருத்துவமனையில் சிகிச்சை - குடும்பத்திற்கு கொலை மிரட்டல்


கழுத்தை இறுக்கி பிடித்ததாலும், கத்தி பேசியதில் ஹை பிரஷர் ஆகி மயக்கம் அடைந்து கீழே விழுந்தேன். அங்கிருந்து கட்சி நிர்வாகிகள் என்னை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர் பரிசோதனை செய்ததில் சிறிய அளவில் இரத்த அழுத்தத்தம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் எனக்கும், என் மனைவிக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுகிறார்.


குமரகுரு அவர்கள் செல்வக்கான பண பலம் படைத்த ஆள் என்பதால் எனக்கும் என் குடும்பத்திற்கும் மிரட்டல் வருகிறது. மேலும் இது தொடர்பாக மாவட்ட கழக செயலாளர் சி.வி. சண்முகம் அவர்களுக்கும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் புகார் அளித்து இருகிறேன்.


நீ தான் எம்பி -  எம்பி சீட்டு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார்


எம்பி சீட்டு வாங்கித் தருவதாக கூற ஏமாற்றி விட்டார். மார்ச் 12ஆம் தேதி வரைக்கும் "நீ தான் எம்பி, நீதான் எம்பி என்று கூறினார். நீ பல கோடி செலவு பண்ணி இருக்கிறாய் உன்னை 10 கோடி செலவு செய்து ஜெயிக்க வைக்கிறேன் என்று நம்பிக்கையூட்டினார் ஆனால் அவர் கடைசியில் ஏமாற்றி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.