இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில், புதுப்பிக்கப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தினை இன்று (16.11.2023) தொடங்கி வைத்தார்.


இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் தெரிவிக்கையில், "விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில், புதியதாக தங்கத்தேர் செய்யப்பட்டு கடந்த 10.12.2010 அன்று தங்கத்தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், மேற்படி தங்கத்தேரில் பழுது ஏற்பட்டு 06.12.2019 அன்று முதல் தங்கத்தேர் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் தற்போது அனைத்து மராமத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு தங்கத்தேர் வெள்ளோட்டம் மீண்டும் இத்திருக்கோவிலில் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


தற்போது தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில்களில் 68 தங்கரதங்கள் உள்ளன. இவ்வரசு பொறுப்பேற்றபின் பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க, பெரியபாளையம் திருக்கோவிலில் ரூ.8.0 கோடி மதிப்பீட்டிலும் புரசைவாக்கம், நங்கநல்லூர் ஆகிய திருக்கோவில்களில் தலா ரூ.6.0 கோடி மதிப்பீட்டில் தங்கத்தேர் என மொத்தம் ரூ.16.00 கோடி மதிப்பீட்டில் 3 புதிய தங்கத்தேர்கள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.


மேலும், தற்போது தமிழ்நாட்டில் திருக்கோவில்களில் 57 வெள்ளிரதங்கள் உள்ளன. பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க, இருக்கன்குடி திருக்கோவிலில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டிலும், காளிகாம்பாள் திருக்கோவிலில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டிலும், திருத்தனி திருக்கோவிலில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டிலும், திருக்காவூர் திருக்கோவிலில் ரூ.3.0 கோடி மதிப்பீட்டிலும், நெல்லையப்பர் திருக்கோவிலில் ரூ.4.0 கோடி மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் 5 புதிய வெள்ளி ரதங்கள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று


வருகிறது.மேலும், 71 திருக்கோவில்களில் ரூ.41.53 கோடி மதிப்பீட்டில் புதிய மரத்தேரும், 41 திருக்கோவில்களில் ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் தேர்மராமத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.


மரத்தேரோட்டத்தில் வரலாற்று சாதனைகளாக விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் 150 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டமும், சென்னை, சிந்தாதிரிப்பேட்டை அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றம் அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 87 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டமும், காஞ்சிபுரம் மாவட்டம், சீட்டனஞ்சேரி அருள்மிருகு காளீஸ்வரர் திருக்கோவிலில் 80 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டமும், கடலூர் மாவட்டம், திருக்கண்டீஸ்வரர் அருள்மிகு நடனபாதேஸ்வரர் திருக்கோவிலில் 72 ஆண்டுகளுக்குப் பின் தேரோட்டமும், 50 ஆண்டுகளுக்குப் பின் 2 திருக்கோவில்களிலும், 40 ஆண்டுகளுக்குப் பின் 2 திருக்கோவில்களிலும், 30 ஆண்டுகளுக்குப் பின் 2 திருக்கோவில்களிலும் தேரோட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பழுதடைந்த தங்கத்தேர் மரத்தேர் சரிசெய்யப்பட்டதன் பேரில், இராமேஸ்வரத்தில், 11 ஆண்டுகளுக்குப்பின் 31.10.2022 அன்று தங்கத்தேர் உலாவும், சமயபுரத்தில், 10 ஆண்டுகளுக்குப்பின் 15.12.2021 அன்று தங்கத்தேர் உலாவும், சேலத்தில், 09 ஆண்டுகளுக்குப்பின் 27.10.2023 அன்று அருள்மிகு கோட்டைமாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் உலாவும், திருத்தனியில் 05 ஆண்டுகளுக்குப் பிறகு 14.12.2021 அன்று தங்கத்தேர் உலாவும், வடபழனியில் 02 ஆண்டுகளுக்குப் பின் 20.11.2022 அன்று தங்கத்தேர் உலாவும், திருச்செந்தூரில் 02 ஆண்டுகளுக்குப் பின் அன்று தங்கத்தேர் உலாவும், திருத்தனியில் 10 ஆண்டுகளுக்குப்பின் 04.09.2023 அன்று வெள்ளித்தேர் உலா மீண்டும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை மற்றும் அறிவுறுத்தலின்படி, 07.05.2021 முதல் 16.11.2023 வரை 1153 திருக்கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ரூ.5,508 கோடி மதிப்பீட்டிலான 5,917 ஏக்கர் நிலங்கள் மீட்டெடுப்பு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.