உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர், ’70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா -2023” நிகழ்ச்சியில் 208 பயானிகளுக்கு ரூ.10.5 கோடி மதிப்பீட்டில அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கூட்டுறவுத்துறையினால், அனைத்து தரப்பு மக்களின் நலன் காக்கப்படுகிறது என பேசினார்.


அமைச்சர் பொன்முடி  மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில்  தனியார் மண்டபத்தில், கூட்டுறவுத்துறை சார்பில், நடைபெற்ற ’70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - 2023” நிகழ்ச்சியினை இன்று (16.11.2023) துவக்கி வைத்தார்கள்.


அமைச்சர் பொன்முடி பேசுகையில், “முதல்வர் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்ற வளர்ச்சிக்கும், விவசாயத்தினை பாதுகாத்திடவும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு பல்வேறு சிறப்பு மிக்க திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் ஒரு துணை உண்டென்றொல் அது கூட்டுறவுத்துறையாகும். இதன் காரணமாக இத்துறைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.


முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 20-ஆம் தேதிவரை கூட்டுறவு வார விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில்தான் கூட்டுறவு சங்கங்கள் முதன் முதலாக உருவாக்கப்பட்டு, இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகளவிற்கு முன்னோட்டமாக திகழ்ந்து கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு அனைத்து தரப்பு மக்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது.


கூட்டுறவே, நாட்டுயர்வு என்பதை உணர்ந்து, கிராமப்பகுதிகளில் அதிகப்படியான கூட்டுறவு சங்கங்கள் உருவாவதற்கும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாவதற்கும் காரணமாக அமைந்தவர் முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது. முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மகளிரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக சுழல்நிதிக்கடனுதவிகளை வழங்கி அவர்கள் பிறர்உதவியின்றி சுயமாக செயல்படுவதற்கு வழிவகை அமைத்துக்கொடுத்துள்ளார்கள். டாக்டர் கலைஞர் அவர்கள், ஆட்சியில்தான் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம், விவசாயிகள் எளிதில் தாங்கள் விளைவித்த கரும்பினை விற்பனை செய்ய முடியும்.


இதுமட்டுமல்லாமல், சர்க்கரை ஆலையிலிருந்து அரசு நிர்ணயித்த விலையின் அடிப்படையில் சர்க்கரை வாங்கிச்சென்று வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் பயன்பெற்றனர். இதனால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளிற்கு தேவையான விலை கிடைக்கப்பெறுவதோடு, உரிய நேரத்தில் பணமும் கிடைக்கப்பெற்று பயனடைந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், கூட்டுறவு பண்டக சாலை செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளிற்கான உரிய விலையும் கிடைக்கப்பெறுகிறது. கூட்டுறவு பண்டக சாலையின் மூலம், நிறைய நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. 


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், ஒரு இலட்சம் மின் இணைப்பு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடியும், நகைக்கடன் தள்ளுபடி செய்துள்ளார்கள். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, விவசாயப்பணிகளுக்கு தேவையான உரங்கள் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்ததுடன், விவசாயப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக பயிர்கடன் உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில், 221 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.


இச்சங்கங்களில் அதிகப்படியான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடனுதவி போன்றவை வழங்கப்பட்டுள்ளது.  எனவே, கூட்டுறவுத்துறை ஒன்றே அனைவரையும் ஒருங்கிணைத்து நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் மிகவும் உறுதுணையாக உள்ளது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்தார்.