உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏனாதிமங்கலம் சாலையில், விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின், நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஐந்து இலட்சம் மரக்கன்று நடும் திட்டத்தின்கீழ், மரக்கன்றினை நட்டு வைத்து, தொடங்கி வைத்தார்.


உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மானிய கோரிக்கையின் போது, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளியில்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில், 07.06.2023 அன்று சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்று நட்டு வைத்து, தொடங்கி வைத்தார்.


விழுப்புரம் நெடுஞ்சாலை கோட்டத்தில், 25,000 மரக்கன்றுகள் நடும் பணியில், விழுப்புரம் உட்கோட்டத்திற்கு 5,000 மரக்கன்றுகள், செஞ்சி உட்கோட்டத்திற்கு 5,000 மரக்கன்றுகள், திண்டிவனம் உட்கோட்டத்திற்கு 10,000 மரக்கன்றுகள் மற்றும் வானூர் உட்கோட்டத்திற்கு 5,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ், மகிழம், வேம்பு, பூவரசு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையினைச் சார்ந்த மரங்கள் நடப்படவுள்ளது. இம்மரக்கன்றுகள் 24 மாத காலம் வளர்ச்சி கொண்டவையாகும். பருவமழைக்கு முன்பாகவே, மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


இன்றைய தினம், ஏனாதிமங்கலம் சாலையில், 5,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என்கிற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சொல்லிற்கிணங்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பசுமை போர்வையினை உருவாக்கிடும் வகையில் மரங்கள் நடப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், நெடுஞ்சாலைகளில் அகலப்படுத்தம் பணி மேற்கொள்ளப்படும் இடையூறாக உள்ள மரங்கள் கண்டறியப்பட்டு அவற்றை அகற்ற மாவட்ட வன அலுவலர், விழுப்புரம் அவர்களுக்கு விண்ணப்பித்து மாவட்ட பசுமைக் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஒரு மரத்தினை அகற்ற 10 மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்தது தர வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அனுமதிப்பெற்று நெடுஞ்சாலைத்துறை மூலம், அகற்றப்படுகின்ற ஒவ்வொரு மரத்திற்காகவும் 10 மரக்கன்றுகள் வீதம் நடவு செய்து தரப்படுகிறது.


இவ்வாறு நடவு செய்கிற மரங்களில் சில மரக்கன்றுகள் பல்வேறு காரணங்களால் பட்டுபோகிறபோது அவற்றிற்கு பதிலாக சாலைப்பணியாளர்கள் மூலம் மேற்படி மரக்கன்றுகள் மீண்டும் நடவு செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் நெடுஞ்சாலை கோட்டத்தின் மூலம், 2020 - 2021 மற்றும் 2021 - 2022 ஆம் ஆண்டுகளில் விழுப்புரம், வானூர், செஞ்சி மற்றும் திண்டிவனம் ஆகிய உட்கோட்டங்களில் தலா 1,000 மரக்கன்றுகள் வீதம் இரண்டு ஆண்டிற்கு 8,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடுவதின் மூலம், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மண் வளம், மழை வளத்தினை கூட்டுவதற்கும், காற்று மாசுபடுவதை தடுப்பதற்கும் 3:1 என்ற விகிதத்தில் பசுமை போர்வையினை அதிகப்படுத்துவதற்கும் மரங்கள் நடப்பட்டு வருகிறது. அரசால் மரக்கன்றுகள் நடப்பட்டாலும் அதனை பாதுகாப்பதற்கு பொதுமக்களும் முன்வர வேண்டும். எனவே, தங்கள் பகுதிகளில் நடப்படும் மரங்களை நல்ல முறையில் பாதுகாத்து பராமரிப்பதுடன், தொடர்ந்து கண்காணித்து வளர்ப்பது நம் அனைவரின் கடமையாகும் என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார்.