விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி கூட்டரங்கில், டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இலவச வீட்டுமனைப் பட்டாவினை பயனாளிகளுக்கு அமைச்சர் பொன்முடி வழங்கினார்.


அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் குடிசைகள் இல்லா நிலையினை உருவாக்க வேண்டும், அனைவருக்கும் வீடு என்ற உயர்ந்த எண்ணத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, இருளர் இன மக்கள், நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அதிகளவில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை பெருமளவில் வழங்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் வசிக்கும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் பல்வேறு அரசு திட்டங்களின் வாயிலாக நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பாக, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.  அதன் தொடர் நிகழ்வாக, இன்றைய தினம், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, 1,060 நபர்களுக்கு ரூ.6,32,85,025/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளிலிருந்து தற்பொழுதுவரை விழுப்புரம் மாவட்டத்தில், 4,449 ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், வீடு கட்ட மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா திட்டத்தின்கீழ், 3,331 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1,722 ஆதிதிராவிட மக்களுக்கும், 542 பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பல்வேறு பகுதிகளில் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் மக்களுக்கு. மாற்று இடமாக அரசுக்கு சொந்தமான இடத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், பெண்களின் நலனில் அக்கறை கொண்டு, கலைஞர் உரிமைத்திட்டத்தின்கீழ், உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையினை உயர்த்தி வழங்கி அவர்களின் நலனையும் பாதுகாத்து வருகிறார்கள். மேலும், பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், ஊக்கத்தொகையினை வழங்கி பெண்கள் உயர்கல்வி பயில்வதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.


எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் மூலம், அனைத்து தரப்பு மக்களும் மட்டுமல்லாமல், விளிம்பு நிலை மக்கள் வாழ்விலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள் எனத் தெரிவித்தார்.