விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணியினை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில், இன்று (07.12.2023) துவக்கி வைத்தார்.


பின்னர் அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், ”செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை 21.10.1980 அன்று தொடங்கப்பட்டு, நாளொன்றுக்கு 1250 டன்கள் அரவை திறனுடன் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. 1990-ஆம் ஆண்டு முதல் நாளொன்றுக்கு 3000 டன்களாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதுவரை 42 அரவைப்பருவத்தினை கடந்துள்ளது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களிலிருந்து கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட பகுதியினை எல்லையாக கொண்டு 2 கோட்டங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பகுதியினை எல்லையாக கொண்டு 3 கோட்டங்களும், இரு மாவட்ட பகுதிகளையும் கொண்டு 4 கோட்டங்கள் என மொத்தம் 9 கரும்பு கோட்ட அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில்




சராசரியாக 4000 அங்கத்தினர்கள் கரும்பு சப்ளை செய்து வருகின்றனர். 2022-2023 அரவைப் பருவத்தில் கரும்பு சப்ளை செய்த விவசாயிகள் அனைவருக்கும் டன் ஒன்றிற்கு ரூ.2821.25 வீதம் ரூ.124.29 கோடி நிலுவையின்றி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. இத்துடன் தமிழ்நாடு அரசு மூலம் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.195/- வீதம் ரூ.8.59 கோடி கரும்பு சப்ளை செய்த அனைத்து அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  2022-2023 ஆம் ஆண்டு 4,26,750 டன்கள் அரவை செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் அரவை செய்த டன்களில் இரண்டாம் இடம் ஆகும். சராசரி மகசூல் ஏக்கருக்கு 31 டன்களும் சர்க்கரை கட்டுமானம் 9.13 சதவீதமும் பெறப்பட்டது. 17.02.2016 முதல் 18 மெகா வாட் திறன் கொண்டதாக இணை மின் உற்பத்தி துவக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.  2023-2024 ஆம் ஆண்டுக்கு 13845 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதில் 7,618 ஏக்கர் விழுப்புரம் மாவட்டத்திலிருந்தும் 6,227 ஏக்கர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்தும் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் இறந்த பணியாளர்களின் வாரிசுகள் 34 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தற்பொழுது, 2023-2024 ஆம் ஆண்டுக்கு 4.25 இலட்சம் டன்கள் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


இந்நிழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஓம் சிவ சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் இரா.முத்துமீனாட்சி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வருகை தந்த அமைச்சர் பொன்முடிக்கு விழுப்புரம் தெற்க்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர்.சீனு.காவியவேந்தன் தலைமையில் தாரை தப்பட்டை முழங்க வரவேற்றார்.