விழுப்புரம்: அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு திண்டிவனத்தை சார்ந்த அரசு ஊழியர் தம்பதியினர் முண்டியம்பாக்கதிலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமேதை அம்பேத்கரின் 67 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் அம்பேத்கரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் திண்டிவனத்தை சார்ந்த அரசு ஊழியர்களான ராஜேஷ் தீனா, தமயந்தி தம்பதியினர் அம்பேத்கரின் நினைவுநாளில் மற்றவர்களுக்கு உதவிடும் வகையில் ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடவும், உடல் தானத்தை வலியுறுத்தி இருவரின் உடல்களை நேற்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.
மேலும், அம்பேத்கரின் நினைவு நாளில் உடல் தானத்தை அளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் வழங்க கூறியபோதே உடல் உறுப்புகளையும் தானமாக வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர். தமிழக அரசு இருளர் சமூக மாணவர்கள் கல்வி கடன் பெறும் போது, அரசு ஊழியர்கள் யாரேனும் கையெழுத்திட்டு கல்வி கடனுக்கு முழுபொறுப்பேற்று கொள்ளவதாக கையொப்பம் வழங்கவேண்டும் என்ற நிபந்தனை அகற்ற வேண்டுமென அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளனர்.
உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதை
இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.