திண்டிவனத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.


திண்டிவனம் மக்களின் பகல் கனவாக இருந்தது, மேலும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் இணைப்பு நகராக உள்ள திண்டிவனத்தில் பேருந்து நிலையம் இல்லாததால் மேம்பாலத்திற்கு கீழே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கும் சூழல் நிலவி வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு தமிழக அரசு பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடரில் நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திண்டிவனத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.


இந்த நிலையில் இன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் தலைமையில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.


இதனை தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :-


தமிழ்நாடு முதலமைச்சர், சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு திண்டிவனம் நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருடன் பல்வேறு கட்டங்களாக இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூபாய்.20 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


புதிய பேருந்து நிலையத்தில், 3,110 ச.மீ பரப்பளவில் பேருந்து நிலையம் கட்டிடம், 3,338 ச.மீ பரப்பளவில் பேருந்து நிறுத்தங்கள், 1000 ச.மீ பரப்பளவில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 300 ச.மீ பரப்பளவில் கட்டண கழிப்பறைகள் மற்றும் இலவச சிறுநீர் கழிப்பிடம், 300 ச.மீ பரப்பளவில் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி அமைய உள்ளது. எதிர்காலத்தில் விரிவுபடுத்துவதற்காக ஏக்கர் காலியிடம் 1 விடப்பட்டுள்ளது.


பேருந்து நிலைய வளாகத்தில், 50 பேருந்து நிறுத்தங்கள், 61 கடைகள், - 4 - தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம், 1 - சைவ உணவகம், 1 - அசைவ உணவகம், 1- பொருள்கள் வைப்பறை, 10 - காத்திருப்பு கூடம், 6 - நேரக்காப்பகம், 1 - காவல்துறை கட்டுப்பாட்டு அறை, 1 - நான் உங்களுக்கு உதவலாமா அறை, 1 - பேருந்து முன்பதிவறை, 1 இரயில் முன்பதிவறை, 1 -ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வறை, 2 தொகுதி மாற்றுத்திறனாளிகள் ஓய்வறை, 3 தொகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை, 1 - சுகாதார பிரிவு அலுவலகம், 2 - இலவச சிறுநீர் கழிப்பிடம், 1 - நிர்வாக அறை, 1- பதிவறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதியும் பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.


புதிய பேருந்து நிலையத்தின் மூலம், நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில்புரியும் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் குபேந்திரன், திண்டிவனம் நகராட்சி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.