விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், துரித நடவடிக்கையின் மூலம், விக்கிரவாண்டி வட்டம், அய்யங்கோவில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளமதி என்பவருக்கு திருநங்கை ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக கூறியதாவது :-
விழுப்புரம் மாவட்டத்தில், வட்ட அளவில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், கடந்த சனிக்கிழமை (21.01.2023) அன்று பொது விநியோக திட்டத்தின்கீழ், சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது. விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்வு முகாமினை பார்வையிட்டு, ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும்பொழுது, விக்கிரவாண்டி வட்டம், அய்யங்கோவில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளமதி என்ற திருநங்கை ஓய்வூதிய உதவித்தொகை வழங்க வேண்டி கோரிக்கை மனு அளித்தார். உடனடியாக இக்கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அதனடிப்படையில், விக்கிரவாண்டி வட்டம், அய்யங்கோவில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளமதி, என்பவரின் கோரிக்கை மனுமீது ஆய்வு கொண்டதில் திருநங்கை ஓய்வூதியம் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர் என கண்டறியப்பட்டது. அதன்படி, இன்றைய தினம் இளமதி என்பவருக்கு மாதாந்தோறும் ரூ.1,000/- பெறுவதற்கான திருநங்கை ஓய்வூதிய உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டது.
துரித நடவடிக்கையின் மூலம் திருநங்கை உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொண்ட அலுவலர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன், இதுபோன்று பொதுமக்கள் வழங்கும் அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திரு.விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்