விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் விலைவாசி உயர்வை கட்டுபடுத்தாக ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி ஒருவர் மயங்கி ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 


நாட்டின் நிலவி வரும் வேலையின்மை திண்டாட்டம், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை நாடு முழுவதும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


மறியல் போராட்டம்


மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றபோது கேஸ் விலையானது 430 ஆக இருந்தது தற்போது 1200 ரூபாயாக அதிகரித்துள்ளது பெட்ரோல் 71 ரூபாயிலிருந்து 104 ரூபாயாக அதிகரித்துள்ளது, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும் , அரசு காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன பல்வேறு அம்ச கோரிக்களை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகமுழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக விழுப்புரம் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து திருப்பதியிலிருந்து புதுச்சேரி சென்ற ரயிலை மறித்து ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போலீசாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு


மறியல் போராட்டம் நடைபெற்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி நிர்வாகி ஒருவர் மயங்கி விழுந்தையடுத்து போலீசார் வேண்டுமென்றே நடிப்பதாக கூறியதால் போலீசாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதை அடுத்து போலீசார் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மறியலின் போது மயங்கி விழுந்த நபரை தூக்கி சென்று ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.