விழுப்புரம்: நீதிமன்ற உத்தரவுபடி விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வந்த வள்ளலார் மடத்தின் பூட்டினை உடைத்து இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையில் முறைகேடு நடைபெறுவதாக சீனுவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விழுப்புரம் மண்டல இணை ஆணையர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில் விழுப்புரம் மண்டலம் இணை ஆணையர் சிவக்குமார் விசாரணை செய்ததில் கணக்கு வழக்குகள் சரியாக பின்பற்றாமல் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து விழுப்புரம் மண்டலம் இணை ஆணையர் சிவக்குமார் விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வந்த வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையை இந்து சமய நிலைத்துறை கீழ் கொண்டு வருவதாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இந்த அறக்கட்டளையை நடத்தி வரும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் வழங்கி கையகப்படுத்துவதாக அறிவித்தனர். அதன்படி இன்று இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அறக்கட்டளை கைப்பற்ற சென்றபோது மடத்தினை பூட்டி சாவியை தராததால் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மதினா தலைமையிலான அதிகாரிகள் பூட்டினை உடைத்து இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கொண்டு வந்தனர். போலீசாரின் பாதுகாப்போடு மடத்தின் பூட்டினை உடைத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்