விழுப்புரம்: கிளியனூர் அருகே கிளாப்பக்கத்தில் பேருந்து வழித்தடம் நீட்டிப்பு சேவையை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கிளாப்பாக்கத்தில், கிளாப்பாக்கம் - மரக்காணம் வரையிலான வழித்தடம் நீட்டிப்பு செய்த பேருந்து சேவையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பொன்முடி மேடையில் பேசுகையில்...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற மக்களும் நகரப்புற பகுதிகளுக்கு எளிதில் மற்றும் விரைவாக சென்றிடும் வகையில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு கிராமப் புறங்களிலிருந்து மக்கள் நகர் பகுதிகளுக்கு எளிதில் சென்றிடும் வகையில், கூடுதலாக பேருந்து சேவை வசதி, புதிய வழித்தடங்களில் பேருந்து வசதி போன்றவை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர் நிகழ்வாக, இன்றைய தினம் வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிளாப்பாக்கத்திலிருந்து ஓமிப்பேர், அடசல், நடுக்குப்பம், எம்.புதுக்குப்பம், கந்தாடு வழியாக மரக்காணத்திற்கு பேருந்து சேவை வசதியும், கிளாப்பாக்கத்திலிருந்து ஓமிப்பேர், அடசல் மற்றும் கொளத்தூர் வழியாக பிரம்மதேசத்திற்கு பேருந்து சேவை வசதியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் எளிதில் நகர் பகுதிகளுக்கு சென்றிட முடியும்.
மேலும் முதல்வர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும், பொருளாதார முன்னேற்றத்தில் ஏற்றம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்திலே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நகர்ப்பகுதிகளைப் போன்றே கிராமப்புறங்களும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திட உத்தரவிட்டதுடன், அதற்கு தேவையான நிதியினையும் ஒதுக்கீடு செய்து உள்ளார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தார்கள். இதன் மூலம் எண்ணற்ற கிராமப்புற மாணவர்கள் இலவசமாக உயர்கல்வியினை பயின்று வருகிறார்கள். இதுமட்டுமில்லாமல், மாணவியர்கள் தொடர்ந்து கல்வி பயின்றிடும் வகையில் ‘புதுமைப்பெண” திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத்தொகையினை வழங்கி வருகிறார்கள்.
மாவட்டந்தோறும் நேரிடையாக சென்று களஆய்வு மேற்கொண்டு மக்களின் கோரிக்கைகள் மற்றும் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்கள் என்ன என்பதை அறிந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் வருகை புரிந்து, மாவட்டத்தின் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்வதோடு, மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள். எனவே, மக்களின் முதல்வராக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரம் காலம் பாராமல் மக்கள் பணியாற்றி வருகிறார்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வானூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் எஸ்.உஷா, ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் வி.பருவ கீர்த்தனா விநாயகமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பிரேமா குப்புசாமி, கிளியனூர் ஒன்றிய செயலாளர் ராஜி, கிளாப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக(வி)லிட், பொது மேலாளர் அர்ஜீனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.