விழுப்புரம்: விழுப்புரத்தில் யாணை தந்தத்தால் செய்யப்பட்ட 6 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நான்கு யாணை சிலை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உட்பட 3 பேரை ஒரு நாள் வனத்துறை போலீசார் எடுத்து விசாரணை செய்ய விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
யானை தந்தங்களாலான பொம்மைகள்
யானை தந்தத்தினால் செய்யப்பட்ட பொம்மைகளை ஒரு கும்பல் காரில் கடத்திக்கொண்டு வந்து விழுப்புரம் நகரில் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து விற்பனை செய்வதாக தமிழ்நாடு வனம் மற்றும் சென்னை மண்டல வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கடந்த 13-ந் தேதியன்று மதியம் 2.30 மணியளவில் ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
உடனே அங்குள்ள அதிகாரிகள், விழுப்புரம் வனச்சரக அலுவலகத்தை தொடர்புகொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் அறிவுரையின்பேரில் விழுப்புரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன், வனவர் சுகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் அடங்கிய குழுவினர், அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்றனர்.
யானை தந்தங்களால் செய்யப்பட்ட 4 பொம்மைகளை விற்பனை செய்ய முயன்றதாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி ஈஸ்வரி (வயது 50), கருப்புசாமி (24), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தேவராஜன்பேட்டையை சேர்ந்த முகமது ஜியாவுதீன் (50), புதுக்கோட்டை அறந்தாங்கி எல்.ஆர்.புரத்தை சேர்ந்த ஜஸ்டிஸ் (46), திருச்சி பேட்டை வாய்தலை கார்த்திகேயன் (49), திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளிவாளி பாளையம் பாலமுருகன் (43), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சிவாலயம் தோப்பு தெருவை சேர்ந்த ராஜா (38), தஞ்சாவூர் திருவையார் பிரபாகரன் (36), பாபநாசம் செட்டித்தெரு சுப்பிரமணியன் (37), தஞ்சாவூர் சீனிவாசபுரம் பைசல் (50), பாபநாசம் ருவந்தகுடி ராஜ்குமார் (56), சேலம் அதிகாரிப்பட்டி பார்த்தசாரதி (42) ஆகிய 12 பேரை கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
யானை தந்தங்களினால் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள் பறிமுதல்
கைதான அவர்களிடமிருந்து 6½ கிலோ எடையுள்ள யானை தந்தங்களினால் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள் மற்றும் ஒரு கழுத்து மாலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த 4 யானை பொம்மைகளும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் பகுதியில் கைவினைப்பொருட்களாக தயார் செய்யப்பட்ட மிகவும் பழமைவாய்ந்தவை ஆகும். இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்த கடத்தலில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைதானவர்களில் முக்கிய நபர்களான ஈஸ்வரி, ஜியாவுதீன், ஜஸ்டிஸ் ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் வனத்துறையினர் மனுதாக்கல் செய்தனர்.
3 பேரை காவலில் எடுத்து விசாரணை
இந்த மனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. இதற்காக ஈஸ்வரி உள்ளிட்ட 3 பேரையும் வனத்துறையினர், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த மனுவை ஏற்ற நீதிபதி ராதிகா, 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஈஸ்வரி உள்ளிட்ட 3 பேரையும் விழுப்புரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான வனத்துறையினர், வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்களது செல்போன் அழைப்புகள் விவரத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் தான் யானை பொம்மைகள் கடத்தல் சம்பவத்தில் மேலும் யார், யாரெல்லாம் சிக்குவார்கள் என்ற விவரம் தெரியவரும்.