விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்காணத்திற்கு பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.
மரக்காணத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், தற்போது புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது சனிக்கிழமை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுச்சேரிக்கு அருகில் பிற்பகல் புயலாக கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக, அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் மீட்பு பணிக்காக ரப்பர் படகுகள், மரம் அறவை இயந்திரம், நீர்மூழ்கி மீட்பு பணி வீரர்கள், கயிறு கட்டி மீட்கும் வீரர்கள், தொலை தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட சாதனங்களுடன் வருகை புரிந்துள்ளனர். இதனை எடுத்து மாவட்டத்தில் கடலோர பகுதியான மரக்காணம் பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தற்பொழுது தயார் நிலையில் உள்ளனர்.
மரக்காணத்தில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி, தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், இந்திய வானிலை மையம் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கனமழை தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பேரிடர் காலங்களில் மற்றும் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக புகார்களை தெரிவிக்க உதவி எண்களான கட்டணமில்லாமல் அழைப்பு எண் 1077, புகார் தொலைபேசி எண்: 04146 - 223265, வாட்ஸ்ஆப் எண் 7200151144 தொடர்பு கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியான மரக்காணம் மற்றும் வானூர் வட்டங்களில் உள்ள மீனவ கிராமங்களில் கனமழை பெய்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் பாதுகாப்பு மையங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களில் மீனவ மக்கள் மற்றும் பொதுமக்களை தங்க வைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்டவைகளை அனைத்துறை சார்ந்த அலுவலர்கள் வழங்கிட வேண்டும்.
காவல்துறை, தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலத்தில் கனமழை அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான முறையில் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைப்பதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். வருவாய் துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைத்து கிராமங்களிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் கனமழை பெய்தால் உடனடியாக அப்பகுதி மக்களை சம்மந்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
இதுமட்டுமல்லாமல், ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஊராட்சி அளவில் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கும் பட்சத்தில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகளில் மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோரங்களில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவதற்கான மரம்வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம் மூலம், மின் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சரிசெய்வதற்கான மின்கம்பிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மின் பணியாளர்களும் தயார் நிலையில் இருந்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றில் நீர் இருப்பு குறித்த தகவல் மற்றும் நீர் வெளியேறும் அளவினை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திட வேண்டும். மேலும், போதிய மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் மற்றும் காலி சாக்குபைகள் ஆகியவற்றை இருப்பு வைத்துக்கொள்ளுமாறும் நீர்வளத்துறை, செயற்பொறியாளரிடம் அறிவுறுத்தப்பட்டது.
மீன்வளத்துறை, உதவி இயக்குநரிடம் புயல் ஏற்படுவதற்கு முன்னரே மீனவ கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு உடனே எச்சரிக்கை விடுக்கவும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைத்திட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் போதிய மாத்திரை மற்றும் மருந்துகள் இருப்பு வைத்திடவும், பேரிடரின்போது தொற்றுநோய் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு வழங்கிட மொபைல் பம்பு செட்டுகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும், முன்னேற்பாடாக அனைத்து கிராமங்கள் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளில் போதிய தண்ணீரை இருப்பு வைத்திட வேண்டும். எனவே, கனமழை மற்றும் புயலின்போது மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.