கடல் அரிப்பால் பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் உள்வாங்கிய நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ளது பிள்ளைச்சாவடி கிராமம். இங்கு சுமார் 350க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீன்பிடி தொழிலை நம்பி இந்த கிராம மக்கள் உள்ளனர்.




இந்நிலையில் தமிழக அரசு சமீபத்தில் ஆரோவில் பீச், பொம்மையார் பாளையம் வரை உள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கு கற்களை கொட்டி கடல் அரிப்பை தடுத்தது. ஆனால் பக்கத்து கிராமமான பிள்ளைச்சாவடி கடற்கரையில் கற்களை கொட்டவில்லை. இதனால்  சமீபத்தில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் 75 மீட்டர் இருந்த மணல் பரப்பு தற்போது 10 மீட்டர் குறைவாக குறைந்துள்ளது. மேலும் அவர்கள் படகு நிறுத்துவதற்கு உரிய இடம் இல்லாமல் பக்கத்து மீனவ கிராமத்தை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.




இதனால் படகுகளுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கோட்டக்குப்பத்தில் இருந்து பொம்மையார் பாளையம் வரையில் கற்களை கொட்டிய அரசு  புதுவை எல்லையோரம் உள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும்.  உடனடியாக பிள்ளைச்சாவடி கடல் பகுதியிலும் கற்களை கொட்டி கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மீன்வளத் துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இன்று ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பிள்ளைச்சாவடி மீனவ குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்ததால் 2 விசை படகு மற்றும் 4 வீடுகள் சேதமடைந்தன இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் இன்று கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் வாகனங்களும், புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்களும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலை சந்தித்தது, இதனை  அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் பிறகு மீனவர்கள் கலைந்து சென்றனர். நீண்ட நாட்களாக மீனவர்கள் அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரக் கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நியாயம் கிடைக்காதது  அப்பகுதி மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.