ஊராட்சிமன்றத் தலைவர் பதவியை பறித்து விடுவோம் என வேட்பாளருக்கு கொலை மிரட்டல் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் 6 ஆம் தேதி நடைபெற்றது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம் 13 ஒன்றியங்களை உள்ளடக்கியதாகும். இதில் முதல்கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய் நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 ஒன்றியங்களை உள்ளடக்கிய 16 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கான 95 பேரும், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 745 பேரும், 372 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 1,459 பேரும், 2,751 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 8,574 பேர் என்று மொத்தம் 10,873 பேர் களத்தில் இருந்தனர்.
இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 54 ஆயிரத்து 459 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 1,569 வாக்குச்சாவடி மையங்களில் வாக்களித்தனர். தேர்தல் முடிந்ததும் வாக்குப்பெட்டிகளுக்கு தேர்தல் அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டது. அதன் பின்னர் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மைய அறைகள் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒலக்கூர் அடுத்த கீழ் கூடலூர் ஊராட்சியில் ஈச்சேரி கிராமத்தை சேர்ந்த சேகர் (37) இவர் கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு உள்ளார். மேலும் சேகருக்கு அதிக அளவில் மக்கள் வாக்கு கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு அதரவாக செயல்பட்டு வரும் திமுகவை சேர்ந்த ராஜன் (32) இவர், சேகர் நேற்று இரவு சொந்த வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் பொழுது காரில் வந்த சேகரை தடுத்து நிறுத்தி காரில் இருந்து கீழே இறங்கி பயங்கர ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் ’’உன்னையும் உன் குடும்பத்தையும் அழித்து விடுவேன்; எங்களிடம் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார். நீ எப்படி வெற்றி பெறுகிறாய்” என்று பார்த்துவிடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து சேகர் ஒலக்கூர் காவல் நிலையத்தில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கேட்டும் மேலும் மக்கள் வாக்களித்த வாக்குகளை நியாயப்படி வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் ஏதேனும் தவறான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால் அதே இடத்தில் என் உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக கூறி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.