விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் நகர மன்றத்தில் கடந்த இரண்டு நகர மன்ற கூட்டங்கள் நடைபெறாத நிலையில் நேற்று மாலை நகர மன்ற கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் நகர மன்ற கூட்டத்தில் வைக்கப்படும் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என கூறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக கவுன்சிலர்கள் 15 பேர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பின்னர், இரண்டு நாட்கள் நகர மன்ற கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி, 15 நகர மன்ற உறுப்பினர்களும் வெளியூர் சென்று விட்டனர். பின்னர் மாலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்த கவுன்சிலர்கள் நகர மன்ற கூட்ட அரங்கில் அமர்ந்தனர். இவர்கள் அமர்ந்து சிறிது நேரம் கழித்து நகர மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் கூட்ட அரங்கிற்கு வந்து கூட்டத்தை தொடங்கினர். நகரமன்ற கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதற்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஹசினா உரிய பதில் அளிக்காததால் திமுக கவுன்சிலர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து நகர மன்ற கூட்டத்திலும் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 33 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் வரி வசூல் செய்யப்பட்ட வார்டுகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு கூட பொது மக்களுக்காக எந்த பணியும் செய்யாதது ஏன், என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்காததால் திமுக கவுன்சிலர்கள் 13 பேர் மற்றும் பாமக கவுன்சிலர்கள் இரண்டு பேர் என 15 பேர் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே நகரமன்றத்தில் இருந்த அதிமுக கவுன்சிலர்கள் நான்கு பேரின் ஆதரவுடன் 17 பேர் தீர்மானத்தில் கையொப்பம் இட்டு தீர்மானத்தை நிறைவேற்றினார்.
பின்னர் வெளிநடப்பு செய்த நகர மன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது தமிழக முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செய்து, சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால் திண்டிவனம் நகராட்சியில் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். பல கோடி ரூபாய் வசூல் செய்த பணத்திற்கு பல்வேறு கணக்குகளை காட்டி முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்தனர். இதனால் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.