விழுப்புரம் : மேல்பாதி கிராம மக்களின் கோவில் பிரச்சனை சுமுகமாக முடியும் நிலையில் இருந்தபோது பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இருப்பதை உறுதி செய்வதற்காக இப்பிரச்சனையை பெரிதாக்கி உள்ளதால் கோவில் சாமி சிலை சிறை வைக்கப்பட்டு உள்ளதாக இயக்குனர் கெளதமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல் பாதி கிராமத்தில் தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய ஒரு சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாவட்ட நிர்வாகத்தினர் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ரவீச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஜீன் 7 ஆம் தேதி கோவிலுக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் இருதரப்பினரும் கோவில் விவகாரம் தொடர்பாக எழுத்துபூர்வமாக விளக்கம் அளித்தனர். இந்நிலையில் கோவிலை திறந்து பூஜை செய்வதற்கு அர்ச்சகருக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இயக்குனர் கெளதமன் மேல்பாதி கிராமத்தில் இரு தரப்பு மக்களை சந்தித்து பேசுவதற்கு இன்று சென்றபோது போலீசார் அவரை மறித்து விழுப்புரம் எஸ்பி அலுவலகம் அழைத்து வந்தனர். அப்போது எஸ்பி அலுவலகத்தில் பேட்டியளித்த இயக்குனர் கெளதமன், மேல்பாதி கிராம மக்களின் கோவில் பிரச்சனை சுமுகமாக முடியும் நிலையில் இருந்தபோது, பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இருப்பதை உறுதி செய்வதற்காக இப்பிரச்சனையை பெரிதாக்கி உள்ளதாகவும், இதனால் கோவில் சாமி சிறை வைக்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் பழியை சுமந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதால் இவ்விவகாரத்தினை எம்பி ரவிக்குமார் பெரிதாக்கி உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவர் தப்பு செய்யவில்லை என்றால் ஏன் கத்தனும் கதறனும் உருளனும் என்று கேள்வி எழுப்பினார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடைபெற்றதை ரசிக்க முடியாவிட்டாலும் திருடுகிற கூட்டம் இனியாவது திருந்துங்கள் என்றும், யார் தப்பு செய்தாலும் தூக்கி எறியவேண்டும், ஏற்கனவே குற்றம் சொன்ன கூட்டம் தான் திருடுவதாகவும் கொள்ளையடிச்ச கூட்டம் தான் குற்றம் சொல்வதாக அதிமுகவையும் திமுகவையும் சாடினார். அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவிற்கே நிதி களஞ்சியமாக செயல்படுவதாக கூறப்படுவதால் அவரே பதவி விலகி வேண்டுமென இயக்குனர் கெளதமன் தெரிவித்துள்ளார்.