விழுப்புரம் : திண்டிவனம் நகராட்சியில் நகர மன்ற கூட்டரங்கில் குப்பையை கொட்டி தீர்மான நகலை கிழித்து போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நகர மன்ற உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர மன்றத்தின் கூட்டம் 90 நாட்களுக்கு பிறகு, இன்று நகர மன்ற தலைவர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 52 தீர்மானங்கள் உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. தீண்டாமை உறுதி ஏற்புடன் தொடங்கிய கூட்டத்தில் தொடங்கியது முதல் பல்வேறு பிரச்சனைக்காக திமுக, அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் பேசினர். இதில் திமுக நகர மன்ற உறுப்பினர் சின்னசாமி தனது வார்டில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லை என்றும் குப்பை வாரக் கூட நகராட்சி உழியர்கள் யாரும் வரவில்லை, என்று கூறி நகர மன்றத்தில் தான் கொண்டு வந்த குப்பையை கொட்டினார்.


பின்னர் தீர்மான நகலை கிழித்தெறிந்து ஆளும் திமுக அரசிற்கு எதிராக நகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். பாமக உறுப்பினர் ஹேமமாலினி மற்றும் மணிகண்டன் பேசும்போது அடிப்படை வசதிகள் கூட செய்து தரமுடியாத நகரமன்றம் எதற்கு என்று கேள்வி எழுப்பினர்.


இந்நிலையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை என்று கூறி திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட 19 நகரமன்ற உறுப்பினர்கள் தீர்மான புத்தகத்தில் கையொப்பம் இடாமல் வெளி நடப்பு செய்தனர். இதனால் எந்த விதமான தீர்மானமும் நகரமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.