விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே அடிப்படை வசதிகளின்றி இயங்கும் எசாலம் அரசு உயர்நிலை பள்ளியில் சமூக விரோதிகள் மது பாட்டில்களை பள்ளி வளாகத்தில் உடைத்து செல்வதால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்,.
அடிப்படை வசதிகளின்றி இயங்கும் அரசு பள்ளி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த எசாலம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கும் என பத்தாம் வகுப்பு வரையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் எசாலம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் உயர்நிலை பள்ளிக்கான அடிப்படை வசதிகளாக கழிப்பறை வகுப்பறை, விளையாட்டு மைதானம், நூலகம் மற்றும் சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகளின்றி செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளி வளாகத்திலேயே குழந்தைகளுக்காக அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது.
சமூக விரோதிகள் கூடாரம்
இதனால் போதிய இடவசதிளின்றியும், குறிப்பாக அந்த அங்கன்வாடி மேல்கூரை சிதலமடைந்து இருப்பதினால் மழை காலங்களில் மழைநீர் ஒழுகும் மோசமான நிலையிலும் உள்ளது. இதனால் அப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் ஒரு சில சமயங்களில் மது அருந்தும் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை பள்ளி வளாகத்திலேயே உடைத்துவிட்டு செல்வதாக மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் இப்பள்ளியை உடனடியாக அரசு கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.