விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர்களுக்கான அனைத்து வசதிகளுடன் குறைந்த வாடகையில் ‘தோழி” பணிபுரியும் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என  மாவட்ட ஆட்சியர்  டாக்டர் சி.பழனி அறிவுறுத்தியுள்ளார்.


தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில், வழுதரெட்டி, எல்லிஸ் சத்திரம் ரோடு, சுப்ரமணிய சிவா நகர் என்ற முகவரியில் தோழி பணிபுரியும் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு கிராமங்கள், வட்டம், மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிபவர்கள், பயிற்சிக்காக வருபவர்கள், பணிநிமித்தமாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்கும் மகளிர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்ட சிறப்பு முயற்சி ஆகும்.


பாதுகாப்பான "தோழி" விடுதி 


தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதி கார்ப்பரேஷன் லிமிடெட் சிறந்த சேவைகளைத்தரும் இந்த விடுதிக்கு “தோழி” என்ற பெயரிடப்பட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் சுப்ரமணிய சிவா நகர், எல்லிஸ் சத்திரம் ரோடு, வழுதரெட்டி என்ற இடத்தில் 13.07.2023 அன்று முதல் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 58 படுக்கைகள் கொண்ட படுக்கை அறைகள் உள்ளது. மேலும் தங்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் பணிபுரியும் பெண் விடுதி மேலாளர் மற்றும் 24 மணி நேரமும் பணிபுரியும் 2 பாதுகாப்பு காவலர், 24 மணி நேரமும் இயங்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பயோமெட்ரிக் உள்நுழைவு வசதி உள்ளது.


மிக குறைந்த வாடகை


மேலும் விடுதியில் சுத்தமான குடிநீர் வசதி, அயனிங்வசதி, துணி துவைப்பதற்கு வாஷிங்மெஷின் வசதி உள்ளது. மழை காலங்களில் பெண்களுக்கு ஏதுவாக குளிப்பதற்கு கீசர் வசதி, 24 மணி நேரமும் இலவச வை-பை வசதி, பார்க்கிங் வசதி அறைகளை சுத்தம் செய்யவும், சுகாதாரமான கழிப்பறை வசதிகளை பராமரிக்கவும் 2 பெண் பணியாளர்கள் உள்ளனர். மேலும் சுகாதாரமான காற்றோட்ட வசதி உள்ளது. இவை அனைத்தும் மிக குறைந்த வாடகையில் கிடைக்கிறது. விடுதியில் 2 பேர் தங்கும் வசதி, 4 பேர் தங்கும் வசதி உள்ளது. 2 பேர் தங்கும் வசதி கொண்ட படுக்கை அறைக்கு தலா ரூ.3,500/- க்கும், 4 பேர் தங்கும் வசதி கொண்ட அறைக்கு தலா ரூ.2,000/- என குறைந்த வாடகையில் அமைந்துள்ளது.


இந்த விடுதி போன்று இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கான இல்லமாக செயல்படுகிறது. விடுதியில் தங்கும் சேவையைப்பெற பயனாளர்கள், உள்ளுரைவோர்கள் www.tnwwhcl.in < http://www.tnwwhcl.in/ >, என்ற ஒருங்கிணைந்த இணையதளத்தின் மூலம் தங்கள் விவரங்களை உள்ளீடு செய்து பயடைய தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவலுக்கு 04146-294470 என்ற தொலைபேசி எண்ணிலும், தோழி பணிபுரியும் மகளிர் விடுதி, சுப்ரமணிய சிவா நகர், எல்லிஸ் சத்திரம் ரோடு, வழுதாரெட்டி விழுப்புரம் என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி  தெரிவித்துள்ளார்.