வட்டிக்கு பணம் கேட்டு கொடுக்காததால் வழிமறித்து வெட்டி கொலை...


விழுப்புரம் நகரத்திற்கு உட்பட்ட சித்தேரிக்கரை முதல் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (எ) ராம்குமார் (32). இவர் அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அதே தெருவை சேர்ந்தவர் பாலாஜி(35) வேலைக்கு செல்லாமல் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி அப்பகுதியில் ரவுடிசம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்குமாரிடம் பாலாஜி வட்டிக்கு பணம் கேட்டுள்ளார் ஆனால் ராம்குமார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கடந்த விநாயகர் சதூர்த்தி அன்று இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராம்குமார் மீது கடும் கோபத்தில் இருந்த பாலாஜி இன்று மாலை 6 மணியளவில் ராம்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்ற போது இரயில்வே கேட் அருகில் ராம்குமாரை வழிமறித்த பாலாஜி மற்றும் அவனது கூட்டாளிகள் ராம்குமாரை தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர்.


இதில் ரத்த வெள்ளத்தில் ராம்குமார் சரிந்து விழுந்தார். உடனடியாக பாலாஜி அவனது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அருகில் இருந்தவர்கள் ராம்குமாரை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராம்குமாருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்தில் விழுப்புரம் நகர காவல்துறையினர் தடையங்களை சேகரித்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள விழுப்புரம் நகர காவல்துறையினர் தலைமறைவாக உள்ள பாலாஜி மற்றும் அவனது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கு பிரியா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். வட்டிக்கு பணம் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் ஒரே தெருவை சேர்ந்த நபரை கஞ்சா போதை இளைஞர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம்; ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம் இழந்த இருவர்...


விழுப்புரம் அருகே உள்ள மோட்சகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 41). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர், ஒரு லிங்கை அனுப்பி வைத்து அதனுள் வரும் வீடியோவை லைக் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட தொகை திருப்பித்தரப்படும் எனக்கூறியுள்ளார். ராதாகிருஷ்ணன், அந்த நபர் கூறியவாறு செய்து ரூ.150ஐ தன்னுடைய வங்கி கணக்கில் பெற்றார். பின்னர் டெலிகிராம் ஐடி மூலம் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசிய நபர், பகுதிநேர வேலையாக சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். இதை நம்பிய ராதாகிருஷ்ணன், 6 தவணைகளாக தனது வங்கி கணக்கு மூலம் அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்து 214ஐ அனுப்பி வைத்தார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும் ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.


வானூர் அருகே உள்ள  நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண், தனது இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக் கொண்டிருந்த போது டெலிகிராம் ஐடி மூலம் அவரை தொடர்பு கொண்ட நபர், ஒரு லிங்கை அனுப்பி வைத்து அந்த லிங்கினுள் சென்று சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். இதை நம்பிய அந்த பெண், தனது வங்கி கணக்கில் இருந்து 10 தவணைகளாக அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும் அப்பெண்ணுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணன் மற்றும் அப்பெண், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 


விழுப்புரம்: அரசுக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை சொந்தம் கொண்டாடுவதில் இருவருக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் கத்தி குத்து 


விழுப்புரம் அருகேயுள்ள பள்ளியந்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சார்ந்த ஸ்ரீதர் என்பருக்கும் 3 செண்ட் புறம்போக்கு இடம் யாருக்கு சொந்தம் என பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு  முன் சுரேசின் உறவினர் பச்சமுத்து பள்ளியந்தூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீதர், கவின்குமார் ஆகிய இருவரும் அவரை பார்த்து திருநங்கை என கேலி செய்துள்ளனர். இதனை சுரேஷ் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் திட்டி உருட்டுக்கட்டை, கல் ஆகியவற்றால் தாக்கிக்கொண்டதோடு கத்தியாலும் வெட்டிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக காணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் ஸ்ரீதர், கவின்குமார், மோகன்ராஜ் சக்கரவர்த்தி  சன்னியாசி ஆறுமுகம் கணேசன் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர், கவின்குமார், மோகன்ராஜ், சக்கரவர்த்தி, சன்னியாசி, கணேசன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அதேபோல் மோகன்ராஜ் அளித்த புகாரின்பேரில் சுனில்குமார், அய்யப்பன், சுரேஷ், அபுன், சண்முகம், பசுபதி ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப்புற தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்


கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி, பென்ஷன் உள்ளிட்ட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும், கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி பணப்பலத்துடன் கூடிய 3 கட்ட பதவி உயர்வு 12, 24, 36 வருட பணிக்கு வழங்க வேண்டும், 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, பணிக்கொடை ரூ.5 லட்சம், குரூப் இன்ஸ்சூரன்ஸ் ரூ.5 லட்சம், மருத்துவ காப்பீடு ஆகியவற்றை வழங்க வேண்டும், கிளை அஞ்சலகங்களுக்கு மடிக்கணினி, பிரிண்டர் வழங்கி பிராட்பிராண்ட் நெட்வொர்ட் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.


அந்த வகையில் புதுச்சேரி கோட்டத்திற்குட்பட்ட திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் பதிவு தபால், விரைவு தபால் பட்டுவாடா செய்யும் பணிகள் மற்றும் சேமிப்பு கணக்கு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. மேலும் மேற்கண்ட சங்கங்களை சேர்ந்தவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டிவனம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


செஞ்சி அருகே போக்சோ ( Pocso  act ) சட்டத்தின் கீழ் 4பேர்  கைது  சிறையில் அடைப்பு 


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி உட்கோட்டத்தில் இளஞ்சிறுமி 6 மாதம் கருவுற்றதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை செய்ததில் சமூகவலைதளத்தில் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அதன் மூலம் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாகவும் மேலும் இளஞ்சிறுமிக்கு எவ்வேறு காலங்களில் நான்கு நபர்கள் மூலம் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக தெரியவருகிறது. விசாரணையின் அடிப்படையில் எதிரிகள் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


விழுப்புரம் அருகே கைப்பந்து விளையாட்டில் தகராறு; 7 பேர் கைது


விழுப்புரம் அருகே கைப்பந்து விளையாட்டில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் அருகே உள்ள வி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 56). இவருடைய மகன் ஸ்ரீநாத்தும் (23), அதே பகுதியை சேர்ந்த தேவநாதன் (27), சாந்தகுமார் (23), சம்பத் (25) ஆகியோரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் ஒன்றாக கைப்பந்து விளையாடுவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீநாத், ஈரமான கைப்பந்தை எடுத்து விளையாடியுள்ளார். அதற்கு தேவநாதன் உள்ளிட்ட 3 பேரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் ஸ்ரீநாத், அந்த ஈரமான கைப்பந்திலேயே விளையாடியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தேவநாதன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஸ்ரீநாத்தை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு ஸ்ரீநாத் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த புவனேஷ் (26), சஞ்சய் (21), பிரேம்குமார் (23) ஆகியோர் சேர்ந்து தேவநாதன், சம்பத், சாந்தகுமார் ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஸ்ரீநாத் மற்றும் தேவநாதன், சம்பத், சாந்தகுமார் ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஸ்ரீநாத்தின் தந்தை கலைச்செல்வன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவநாதன், சாந்தகுமார், சம்பத் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதேபோல் தேவநாதன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீநாத், புவனேஷ், சஞ்சய், பிரேம்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.