புதுச்சேரியில் திமுக எம்பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அகரம் பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி உள்ளது. இன்று விடியற் காலை 2.30 மணியளவில் சென்னை மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையைச் சேர்ந்த 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கல்லூரி நிர்வாகக் கட்டிடம் மற்றும் மருத்துவமனை நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் யாரையும் வெளியில் அனுப்பவில்லை, மேலும் காலை 6 மணி ஷிப்டிற்கு வந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.




பின்னர் மருத்துவமனை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லக்கூடிய நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். 8 மணிக்கு மேல் வந்த நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் உள்ளே அனுமதிக்காததால் வாயிலில் காத்திருந்தார்கள். பிறகு 9 க்கு மேல் அடையாள அட்டையை பரிசோதித்த பின்பு மருத்துவ மாணவர்களையும், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களையும் உள்ளே அனுமதித்தனர்.


ஜெகத்ரட்சகன் எம்.பியின் சொந்த ஊர் புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் கலிங்கமலையில் உள்ளது. இவருக்கு புதுச்சேரியில் நட்சத்திர விடுதிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. இருப்பினும் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே வருமான வரிச்சோதனை நடைபெறுகிறது. இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




வருமான வரித்துறை சோதனை:


சென்னையில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களும் அடங்கியுள்ளன. குறிப்பாக  அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின்  விடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஜெகத்ரட்சகன் அந்த வீட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தியாகராய நகரில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஓட்டலிலும், வேளச்சேரியில் அவருக்கு சொந்தமாக உள்ள மருத்துவமனையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. குரோம்பேட்டை ரீலா மருத்துவமனை, பாரத் பல்கலைக் கழகம், மதுபான ஆலை, மாமல்லபுரத்தில் உள்ள கால்டன் சமுத்ரா உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு அல்லது ஏற்கனவே அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என, எதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என தற்போது வரை தெரியவில்லை.


70 இடங்களில் சோதனை:


இதனிடையே, பூந்தமல்லி அருகே அமைந்துள்ள ஜெகத்ரட்சகனின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஆவடி பட்டாபிராமில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில், அதனை உடைத்துக்கொண்டு அதிகாரிகள் உள்ளே சென்றுள்ளனர். இதேபோன்று ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மற்றும் அவருக்கு நெருக்கான நபர்களின் இடங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உள்ளே இருக்கும் நபர்கள் வெளியே செல்லவும், புதிய நபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், வண்டலூரில் இருந்து  கேளம்பாக்கம் செல்லும் சாலையில் அருகே உள்ள மருத்துவ கல்லூரி, மற்றும் பாலாஜி பாலிடெக்னிக், உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  


ரூ.200 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு?


வருமான வரித்துறையினரின் சோதனைக்கு மத்தியில், குரோம்பேட்டையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனைக்கு அருகே உள்ள, அரசுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் முன்னிலையில் வருவாய் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். குத்தகை காலம் முடிந்த பிறகும் அந்த நிலத்தை தனிநபர் பயன்படுத்தி வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த அரசு நிலத்தில் இருந்த குடியிருப்புகளில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே, வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தொடரும் சோதனைகள்:


கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து, சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மணல் ஒப்பந்ததாரர்கள், செல்போன் உதிரிபாகங்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் உற்பத்தியாளர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றன. இந்நிலையில், தான் திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.  நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.