விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள தென்னம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவரத்தினம், மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி ஜனனி (வயது 24). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். 7 மாத கர்ப்பிணியான இவர்,  வீட்டின் வெளியே பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து விட்டு, வீட்டுக்குள் செல்ல முயன்றார். அந்த சமயத்தில் அங்குள்ள கல்குவாரியில் பாறைகளை தகர்ப்பதற்காக வெடி வைக்கப்பட்டது. அப்போது அந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக, ஜீவரத்தினம் வீட்டின் பக்கவாட்டு மேற்கூரை சிலாப் இடிந்து ஜனனி மீது விழுந்தது.


இதில் காயமடைந்து வலியால் கத்திய ஜனனியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்து திண்டிவனம் தாசில்தார் கிருஷ்ணதாஸ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.


அப்போது கிராம மக்கள், எங்கள் கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, கற்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் டிப்பர் லாரிகள் செல்வதால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியதுடன், தொடர்ந்து விபத்துகள் நடக்கிறது. மேலும் குவாரிகளில் வெடிவைத்து பாறைகளை தகர்ப்பதால் நில அதிர்வு ஏற்படுவதுடன் வீடுகளும் சேதமடைகிறது. இதனால் வீடுகளில் வசிக்க எங்களுக்கு அச்சமாக உள்ளது என்றனர்.


பின்னர் அவர்கள், மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்த கோரியும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து கல்குவாரியை பார்வையிட்டு ஆய்வு செய்து எங்கள் அச்சத்தை போக்க வேண்டும் என கூறியும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள், இதுதொடா்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Navratri Golu Dolls: 35 வடிவிலான கொலு பொம்மைகள்...விழுப்புரத்தில் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்