விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்து நியமன அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரசுப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில், ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 16.07.2024 அன்று தொடங்கி 13.09.2024 வரை 91 முகாம்கள் நடைபெறவுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு நியமன அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், இன்றைய தினம், மாவட்டத்தில் தற்பொழுது வரை நடைபெற்றுள்ள மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கை விவரங்கள், துறை வாரியாக பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கை விவரங்கள் குறித்து விரிவாக நியமன அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.


மேலும், நியமன அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறும் நாள் மற்றும் பயன்பெறும் கிராமங்கள் குறித்து முன்னதாகவே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இதுமட்டுமல்லாமல், முகாமின்போது, 15 துறைகள் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களை உடனடியாக முதல்வரின் முகவரித்துறை பக்கத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும், கோரிக்கை மனுக்களை உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு அனுப்பி வைத்து மனு மீதான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


மக்களுடன் முதல்வர் திட்ட முகாமின்போது, உடனடி தீர்வாக சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், குடும்ப அட்டை போன்றவற்றினை உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும். புதிய மின் இணைப்பு தொடர்பாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினால் அம்மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும். இதுமட்டுமல்லாமல், புதிய தொழிற்கடன், கல்விக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு கடன் போன்ற அனைத்துத்துறைகள் மூலம் வழங்கப்படும் வங்கி சார்ந்த கடனுதவி தொடர்பாக பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய தீர்வு காண வேண்டும்.


உரிய ஆவணங்களுடன் கோரிக்கை மனுக்கள் பெறப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அனைத்து மனுக்கள் மீதும் தீர்வு காணும் பொருட்டு தேவையான ஆவணம் தேவைப்படின் முறையாக கேட்டறிந்து மனுவுடன் இணைத்திட வேண்டும். மேலும், கோரிக்கை மனுக்கள் மீது உரிய தீர்வு காணும் விதமாக அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.