விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரி கிராமம் பகுதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் உத்தரவின் பேரில் திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான காவல் ஆய்வாளர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை போலீசார் ஐயப்பன் ஜனார்த்தனன் ,திபன், பூபால் செந்தில் முருகன் கோபாலகிருஷ்ணன் ஆகிய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக அதிவேகமாக வந்த பிக்கப் வேனை நிறுத்தினர். போலீசார் அந்த வேனை தீவிரமாக சோதனை செய்தபோது வேனில் தவிடு மூட்டை அடுக்கிவைக்க பட்டிருந்தன, அதில் தனிபிரிவு போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது அதில் ரகசிய உள் அறை அமைத்து இருந்தது தெரியவந்தது. அதனை திறந்து பார்த்த போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 258 கிலோ 300 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் நிரப்பி வைக்கப்பட்டுள்ளதை கையும் களவுமாக பிடித்தனர். இந்த நிலையில் கஞ்சாவையும் கஞ்சா கடத்திய வேனை பறிமுதல் செய்தனர். 


மேலும் கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் காசக்கோடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரது மகன் உதயகுமார் (வயது 44) மற்றும் சலாம் என்பவரின் மகன் ஆசிப் (வயது 25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? யாருக்காக கொண்டுவரப்பட்டது ? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டார். போலீஸார் விசாரணையில் ஒடிசா மாநிலத்தில் விளைவிக்கப்பட்ட கிரேட் ஒன் என்கின்ற உயர்ரக கஞ்சா இலங்கைக்கு கடத்துவதற்காக சென்னை வழியாக ஆந்திரா சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட கஞ்சா என விசாரணையில் தெரியவந்துள்ளது.


தொடர்ந்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிக்கப் வேனில் கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 258 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய பலர் சிக்குவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடியாக பறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.