விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகே அமைந்துள்ளது சின்ன செவலை கிராமம். இந்த கிராமத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு அருகே அமைந்துள்ளது காளிகாம்பாள் கோயில். இந்த கோயில் பல நூற்றூண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். திருவெண்ணை நல்லூர் கிராமத்தை சேர்ந்த காங்கேயன் என்னும் வேளாளருக்கு பிறந்தவர் சடையப்பர். ஏழைகளிடத்திலும், புலவர்களிடத்திலும்  பண்பும், பாசமும் கொண்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்.


காங்கேயனிடம் பல நாள்கள் பட்டினியால் வாடிய முகத்துடன் வயிற்றுப் பிழைப்பிற்காக வேலை கேட்டு வந்த, கம்பரையும் அவரது தாயாரையும் தெரு வாயிற்படியில் கண்ட சடையப்பர், உள்ளே அழைத்து உபசரித்து தன்னுடைய மாளிகையிலேயே தங்க வைத்துக் கொண்டார். சடையப்ப வள்ளல் தினமும் அதிகாலையில் எழுந்து தனது வயல்வெளிகளைச் சுற்றிப் பார்ப்பது வழக்கம். அதேபோல் காலையில் வீட்டிலிருந்து கிளம்பியதும், ஊருக்கு மேற்கில் அமைந்துள்ள ஏரியில் குளித்துவிட்டு, ஏரியின் வடமேற்கில் குடியிருக்கும் காளிகாம்பாளை மனம் உருக வேண்டி உலக மக்கள் அனைவரும் பசியின்றியும், பிணியின்றியும் வாழ பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.




அதுபோல், வள்ளலும், கம்பரும் காளியை வழிபட்ட போது, வால்மீகியால் எழுதப்பட்ட ராமரின் கதையை தமிழில் எழுதும்படி கம்பரை வள்ளல் கேட்டுள்ளார். அப்போது ஸ்ரீமத் நாராயணனுடைய அவதாரமாகிய ராமபிரானின் சரித்திரத்தை அவரது தங்கையான இந்த அந்தரியினுடைய ஆலயத்தில் இப்போதே பூஜைபோட்டு தொடங்கி வையுங்கள் என்று வள்ளலைக் கம்பர் கேட்டாராம். இதனைத் தொடர்ந்து வள்ளல் முன்னாலேயே ராமாயண காப்பியத்தை எழுத ஆரம்பித்துள்ளார் கம்பர் என்று புராணங்களில் கூறப்படுகிறது.


முதலில் இக்கோயில் இயற்கை எழில் சூழ்ந்த வயல் வெளியில் மத்தியில் ஒரு கற்சிலை வடிவில் மட்டுமே காணப்பட்டது. தற்போது வரலாற்று ஆய்வாளர்களை கொண்டு இக்காளிக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. காளி பக்கத்தில் வலது புறத்தில் பிள்ளையாரும் இடதுபுறத்தில் முருகர் கற்சிலையும் உள்ளது. இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களில் சிறப்பாக வழிபாடு இருக்கும் என்றும், அன்றைய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என பக்தர்கள் தெரிவித்தனர்.



கம்பர் வழிபட்ட காளி கோயில் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலாக இக்கோயில் கருதப்படுகிறது. இக்கோயிலில் பக்தர்கள் வேண்டிய வேண்டுதல்கள் நிச்சயமாக விரைவில் நடைபெறும் எனவும், ஒன்பது நாட்கள் தொடர்ந்து அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நினைத்த வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும் என பக்தர்கள் கூறினர். மேலும் இத்தகைய சிறப்புமிக்க கோயிலை பாதுகாக்க வேண்டும் எனவும் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து புதுப்பிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண