விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், கருங்கற்களால் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் மற்றும் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி நேரில் ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவ மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், கடற்கரையோர கிராமங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு மீனவ குடும்பங்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். மேலும், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான மீன்பிடி இறங்குதளமும் அமைத்துக்கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்கள்.
அதனடிப்படையில், வானூர் வட்டம், பிள்ளைச்சாவடியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.14.50/- கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் மற்றும் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிள்ளைச்சாவடியில், 150 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் கடல்சார்ந்த தொழிலையே சார்ந்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில், மழை மற்றும் புயல் காலங்களில் அதிகப்படியான காற்று மற்றும் கடல்சீற்றங்களால் கடல் அரிப்பு ஏற்படுகிறது. எனவே, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் விதமாகவும், மீனவ மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் மற்றும் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வாயிலாக, 39 இயந்திரப்படகுகள் மற்றும் 25 நாட்டுப்படகுகள் பாதுகாப்புடன் நிறுத்துவதற்கு வழிவகையும், மீன்பிடி வலைகள் உலர்த்துவதற்கு வழிவகையும் ஏற்பட்டுள்ளது.
மேலும், இதன் மூலம், 350-க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரம் காக்கப்படுவதோடு, அவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. மேலும், இப்பணியினை விரைந்து மேற்கொண்டு முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்