விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சி, தனியார் திருமண மண்டபத்தில், ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், அனைவருக்கும் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை கோயம்புத்தூரில் இன்றைய தினம் தொடங்கி வைத்துள்ளார்கள். அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலம் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்காலம், இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் ‘மக்களுடன் முதல்வர் வலைதள பக்கத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாக தீர்வு காணப்படவுள்ளது.
அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் நகராட்சி, தனியார் திருமண மண்டபத்தில், ‘மக்களுடன் முதல்வர்” திட்டம், துவக்கி வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், ‘மக்களுடன் முதல்வர்” திட்டமானது அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக 18.12.2023 முதல் 05.01.2024 வரை பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. மேலும், ‘மக்களுடன் முதல்வர்” திட்டம் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.
‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு நில அளவீடு (அத்து காண்பித்தல்), வாரிசுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முதியோர், கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளி, முதிர் கன்னி, மூன்றாம் பாலினத்தவருக்கான உதவிதொகை தொடர்பான கோரிக்கை மனுக்களும்,
எரிசக்தித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கம்பங்கள் மாற்றம் தொடர்பான மனுக்களும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம் வழங்குதல், தண்ணீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்புச் சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை தொடர்பான கோரிக்கை மனுக்களும், காவல்துறை சார்பில், பொருளாதாரக் குற்றங்கள், நில அபகரிப்பு மோசடி, வரதட்சனை மற்றும் இதர புகார்கள், போஸ்கோ சட்டத்தின்கீழ் புகார்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பராமரிப்பு உதவித்தொகை,
மாற்றுத்திறனாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி போன்ற உதவி உபகரணங்கள், சுய தொழில் வங்கிக் கடன், கல்வி உதவித்தொகை, தொழிற்பயிற்சி தொடர்பான கோரிக்கை மனுக்களும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை சார்பில், பெண் பாதுகாப்புச் சட்டம், புதுமைப்பெண் கல்வி உதவித் திட்டம், கல்வி உதவித்தொகை, ஆதிதிராவிடர் நலத்துறையில் வழங்கப்படும் இலவச வீட்டுமனைப்படடா, சலவைப்பெட்டி, தையல் இயந்திரம், தாட்கோ கடனுதவி, டாம்கோ, பாப்செட்கோ, கூட்டுறவு கடனுதவிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடர்பான கடனுதவிகள் போன்ற கோரிக்கை மனுக்களை வழங்கி பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர் திட்டத்தில், பங்கேற்று தங்களுடைய கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.