விழுப்புரம்: மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 கிராம ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடரும் என பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி கூட்டாக அறிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர், இருவல்பட்டு பேரங்கியூர், பெரியசெவலை, ஆனத்தூர் உள்ளிட்ட 25 ஊராட்சிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு 25 கிராம ஊராட்சிகளிலும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று கள்ளக்குறிச்சியுடன் 25 கிராம ஊராட்சிகள் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் பழனி அரசூர் பகுதிக்கு சென்று அரசூர் கூட்டு சாலையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டக் குழு முன்பாக 25 கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 25 ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் என்றும் அந்த ஊராட்சிகள் கள்ளக்குறிச்சியோடு இணைக்கப்படாது என்று அறிவித்தார். மேலும் திருவென்னைய்நல்லூரை புதிய தொகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தொகுதி சீரமைப்பு என்பது அது தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக சாலையில் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரங்கியூர், அரசூர், பெரியசெவலை, ஆனத்தூர், மடப்பட்டு, அரும்பட்டு, மாதம்பட்டு உள்ளிட்ட 25 கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. விழுப்புரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மட்டும் இருந்து வரும் இந்த 25 கிராமங்களை 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் இணைக்கப்பட்டால் அரசு அலுவலகங்களுக்கு செல்லவும், அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை பெறுவதற்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என்பதோடு காலம், நேரம் விரையம் ஆகும் எனக் கூறி 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 25 ஊராட்சி பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர்.