பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு என் மண், என் மக்கள் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் தனது பாதயாத்திரையை தொடங்கினார். இதற்காக அவர் சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு திண்டிவனம் வருகை தந்தார். அவருக்கு பா.ஜனதா கட்சியினர், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராம் மற்றும் அவரது மகன் தென்கோடிபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் மாற்று கட்சியில் இருந்தவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதன் பிறகு திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து என் மண், என் மக்கள் பாதயாத்திரையை தொடங்கினார். அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் நேரு வீதி வழியாக பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்து பின்னர் காந்தி சிலை அருகில் பாதயாத்திரையை முடித்து அங்கு பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு:-
மோடி 3-வது முறையாக பிரதமராக வந்தால் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் இருக்கும். இங்கு அரசியல் மாற்றம் தேவை என்று மக்கள் எண்ணுகிறார்கள். ராமேஸ்வரத்தில் இரும்பு மனிதர் அமித்ஷா தொடங்கி வைத்த பாதயாத்திரை பயணம் 120 தொகுதிகளை தாண்டி 121-வது தொகுதியாக திண்டிவனம் வந்துள்ளேன். தமிழகத்தில் எல்லா இடத்திலும் மாற்றம் என்கிற வார்த்தையைத்தான் மக்கள் பேசி வருகிறார்கள். 70 ஆண்டுகால திராவிட ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், ஊழல்வாதிகளை அடியோடு துரத்த வேண்டும் என்ற நோக்கத்திலே மக்கள் உள்ளனர். அரசியல் மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையோடு மக்கள் காத்திருக்கின்றனர். திராவிட மாடல் ஆட்சியால் பெருமை இருக்கிறதா என்று சொன்னால் பெருமை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் இந்த மண்ணில் பிறந்த ஓமந்தூர் ராமசாமி பல சாதனைகளை புரிந்துள்ளார். அவர் முதலமைச்சர் ஆனதும் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். சென்னை மாகாணத்தில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வந்தார். தமிழ் வளர்ச்சிக்கழகத்தை ஆரம்பித்தார். திருக்குறளை கட்டாய பாடமாக்கினார். தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இவற்றையெல்லாம் ஓமந்தூர் ராமசாமி கொண்டு வந்துள்ளார். அவர் நேர்மையான மனிதர்.
இன்று தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் என்ன நடந்தது, என்னவெல்லாம் நடக்கிறது என்று உங்களுக்கெல்லாம் தெரியும். கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் என 22 பேர் இறந்தனர். பூரண மதுவிலக்கை ஓமந்தூர் ராமசாமி கொண்டு வந்தார். பேரறிஞர் அண்ணாவும் அதே கொள்கையோடு தான் இருந்தார். ஆனால் கலைஞர் கருணாநிதி, முதலமைச்சராக வந்ததும் கையெழுத்திட்டு சாராய கடைகளை திறந்தார். சாராயக்கடைகளை திறந்த பெருமை கருணாநிதியையே சாரும். அதன் விளைவே 22 பேரின் உயிரிழப்பு. கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டனர். அவர்களுக்கும் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கியுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்ததால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் கொடுத்தது இந்த அரசு, கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய அரசு அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம்
சென்னை மழை வெள்ளத்தில் சிக்கி இறந்தால் ரூ.5 லட்சம் கொடுக்கிறார்கள், தீபாவளிக்கு முன்பு சிவகாசியில் வெடி விபத்தில் இறந்தால் ரூ.3 லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் வழங்குகிறது தி.மு.க. அரசு. ஏனென்றால் சாராய ஆலைகளை நடத்துவதே இவர்கள்தான். ரூ.10 லட்சம் கொடுத்தால்தான் இவர்களது சாராய ஆலைகள் நன்றாக ஓடும். 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகளாக அதிகரித்தால்தான் மக்கள் வருவார்கள். இவர்கள் இதுபோன்று செய்வது மாநில அரசின் வருமானத்திற்காக அல்ல, தி.மு.க. உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோரின் சாராய ஆலைகள் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காகத்தான். மக்களின் வளர்ச்சிக்கு எதிரான கட்சி தி.மு.க., தமிழகம் வளர்ச்சி பெறக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர் ஸ்டாலின். இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். கள்ளச்சாராயம் குடித்து இறந்த வழக்கில் கைதானவர்கள் செஞ்சி மஸ்தானுக்கு வலதுகரம், இடதுகரமாக இருப்பவர்கள். அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. அதற்கு அவர், தான் நேர்மையானவர் என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் ரெய்டு நடத்தினார்கள் என்று பொன்முடி கூறுகிறார். பொன்முடி வீட்டில் ரெய்டு நடத்த என்ன காரணம் தெரியுமா? முன்பு இருந்த தி.மு.க. ஆட்சியின்போது செம்மண் குவாரியில் நடந்த முறைகேடுக்காகவும், அதன் மூலம் சம்பாதித்த பணத்தில் இந்தோனேசியா, துபாயில் 2 கம்பெனிகளை விலைக்கு வாங்குகிறார். யாராவது ரூ.42 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி ரூ.110 கோடிக்கு விற்றதை பார்த்திருக்கிறீர்களா?
2022-ல் ரூ.41 லட்சத்து 57 ஆயிரத்துக்கு துபாயில் ஒரு கம்பெனியை விலைக்கு வாங்கி அதனை ரூ.110 கோடிக்கு விற்றுள்ளார். இதை தெரிந்துதான் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. ஹவாலா முறையில் தமிழகத்திலிருந்து துபாய்க்கு அனுப்பி அந்த கம்பெனியில் முதலீடு செய்து ஊழல் செய்ததை மத்திய அரசு கண்டுபிடித்தால் அது தவறா? உங்களுடைய வரிப்பணத்தை திருப்பிக்கொடுத்தால் அது தவறா? படித்துவிட்டு வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழிற்சாலைகள் தொடங்க ஒதுக்க வேண்டிய நிதியை கொள்ளையடித்ததை மீட்டுக்கொடுத்தது தவறா? விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சேர வேண்டிய தொகையை மீட்டுக்கொடுத்தது தவறா? இங்கு இருக்கிற ஒரு மனிதன்கூட தி.மு.க.விற்கு வாக்களிக்கக்கூடாது. உங்களுடைய வரிப்பணம் உங்களுக்கு மோடி அவர்கள் மத்திய அரசு மூலம் கொடுக்கிற நிதியை எப்படி கொள்ளையடிக்கிறார்கள் பாருங்கள்.
பா.ஜனதா எங்கே ஒருமுறை ஆட்சிக்கு வந்தாலும் அந்த மாநிலத்தை விட்டு போகாது. அங்குள்ள மக்கள் விடமாட்டார்கள். அதற்கு உதாரணம் 5 மாநில தேர்தல். நேர்மையான ஆட்சியை கொடுப்பதுதான் பா.ஜனதா அரசு. தி.மு.க. அரசு பொய்யை மட்டுமே பேசி ஏழை மக்களை இன்னும் ஏழையாக்கி வருகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில்லை. திராவிட மாடல் என்பது 4-வது தலைமுறைக்கு போஸ்டர் ஒட்டினால் அதுதான் திராவிட மாடல். கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அடுத்து இன்பநிதி. இப்படி இவர்களுக்கு தலைமுறை, தலைமுறையாக போஸ்டர் ஒட்டுவதுதான் திராவிட மாடல். எங்களுக்கு அது வேலை இல்லை. தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை கண்டுபிடிக்க வேண்டும், அடுத்த ஆட்சியாளர்களை கண்டுபிடிக்கவே வந்துள்ளோம். ஏழைத்தாயின் மகனா வாருங்கள் வாய்ப்பு அளிக்க தயாராக இருக்கிறோம்.
திண்டிவனம் நகர்மன்ற தலைவர் துணை நகர மன்ற தலைவரே தனது அருகாமையில் நாற்காலி போட்டு அமர வைப்பதில்லை சாதிய பாகுபாடு பார்த்துவருகிறது, ஆனால் இங்குள்ள அமைச்சர் பொன்முடி திமுக சமூகநீதி சமூக நீதி என்று கூறிக் கொண்டுள்ளார்.
நாளைய தினம் காசியில் தமிழ் சங்கத்தை மோடி அவர்கள் தொடங்கி வைக்கிறார். இதற்கு மோடி தமிழை திணிக்கிறார் என்று குற்றச்சாட்டு வையுங்கள். செங்கோலை பாராளுமன்றத்தின் மையக் கட்டிடத்தில் அவர் வைத்துள்ளார். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைக்கிறது மோடி ஆட்சி. தி.மு.க. சொல்வது வளர்ச்சி அல்ல, அது வீக்கம். ஒரு குடும்பம் மட்டும் வளர்ந்தால் அது வளர்ச்சி அல்ல வீக்கம். இந்த நாடும், சமுதாயமும் வளர்ந்தால்தான் அது வளர்ச்சி. பாரதிய ஜனதாவில் அது நடந்து வருகிறது. ஆனால் தி.மு.க.வில் நடந்து கொண்டிருப்பது கோபாலபுரத்தின் வீக்கம், தமிழகத்தின் வளர்ச்சி அல்ல. அவர்கள் தலைமுறை, தலைமுறையாக மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.
தமிழகத்தின் அரசியல் மாற்றத்தில் நானும் இருப்பேன். 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் நடக்கும். மோடி 3-வது முறையாக பிரதமராகுவது ஒரு குழந்தைக்குக்கூட தெரியும். ஆனால் தெரிந்தும் தெரியாமலும் நடிக்கும் கூட்டம் தி.மு.க. கூட்டம். 400 எம்.பி. தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் இருந்து 39 எம்.பி.க்களை வெற்றி பெற்று அனுப்பி வைக்க வேண்டும் / மாற்றத்திற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். சகோதர, சகோதரிகளே பா.ஜ.க.வுடன் இருங்கள், நீங்கள் அனைவரும் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும்.