விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் நபரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வீட்டுமனைகள் தருவதாக கூறி மோசடி
விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உபையத்துல்லா மகன் ஷாகுல்அமீது (வயது 37). இவரிடம் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த நத்தர்பாஷா, சாதிக்பாஷா ஆகியோர் சேர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு விழுப்புரம் அருகே கஸ்பாகாரணை கிராமத்தில் பிஸ்மி நகர் என்ற பெயரில் மனைப்பிரிவுகள் அமைத்து அதில் மாதம் ரூ.1,600 வீதம் 60 மாதங்கள் பணம் கட்டினால் அதற்குரிய மனைப் பிரிவுகள் பதிவு செய்து தரப்படும் என்றனர்.
அதேபோல் கடந்த 2016-ல் விழுப்புரம் பொய்யப்பாக்கம் பகுதியில் ரோஜா நகர் என்னும் மனைப்பிரிவுகளை அமைத்தும், அதில் மாதம் ரூ.1,200 வீதம் 55 மாதங்கள் பணம் கட்டினால் அதற்குரிய மனைப்பிரிவுகள் பதிவு செய்து தரப்படும் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய ஷாகுல்அமீது, ரூ.1,200 வீதம் 15 மாதங்கள் நத்தர்பாஷா, சாதிக்பாஷா ஆகியோரிடமும், அவர்கள் இல்லாத நேரத்தில் அசாருதீன், ஷாஜி ஆகியோரிடமும் மாதாந்திர தவணை தொகையை மொத்தம் ரூ.18 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.
இவரைப் போன்று கடந்த 2016-ம் ஆண்டு முதல் 180 பேர்களிடமிருந்து ரூ.1½ கோடி வரை வசூல் செய்து அதற்குரிய மனைப்பிரிவுகளையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக்கொடுக்காமல் 4 பேரும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். இதனிடையே சாதிக்பாஷா அவரது மனைவி பெயரில் ரூ.45 லட்சமும், நத்தர்பாஷா அவரது மகனுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான காரையும் வாங்கிக்கொடுத்துள்ளார்.
மஞ்ச நோட்டீஸ் கொடுத்து முடித்துவிடுவேன்
இதையறிந்ததும் பாதிக்கப்பட்ட மக்கள், சாதிக்பாஷா உள்ளிட்ட 4 பேரிடமும் சென்று வீட்டுமனைப்பிரிவுக்காக தாங்கள் கட்டிய பணத்தை திருப்பித்தரும்படி கேட்டதற்கு பணம் தர முடியாது என்றும், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தால் ஏற்கனவே பல பேருக்கு மஞ்ச நோட்டீஸ் கொடுத்து பிரச்சினையை முடித்ததுபோல் உங்களுக்கும் மஞ்ச நோட்டீஸ் கொடுத்து முடித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தனர்.
முக்கிய குற்றவாளி கைது
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஷாகுல்அமீது உள்ளிட்டோர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் நத்தர்பாஷா, சாதிக்பாஷா உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு மே மாதம் சாதிக்பாஷாவை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய நபரான நத்தர்பாஷாவை (50) நேற்று மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.