புதுச்சேரியில் சிறுமி கொலை - போலீசார் விசாரணை 


புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று வரை ஒரு முதியவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது சிறுமியை கொலை செய்தது கருணாஸ் (19) என்கிற வாலிபர் மற்றும் விவேகானந்தன் (57) என்கிற முதியோர் என போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் இன்று காலை சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்படும். அதற்கு பின்னரே அவர் எப்படி கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவரும். முதற்கட்ட விசாரணையில் முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமையை செய்ய முயற்சித்ததில் அதிர்ச்சியில் சிறுமி உயிரிழந்தது என கூறப்படுகின்றது. பின்னர் அவர் கை மற்றும் கால்களை கட்டி முதியவரின் வேஷ்டியில் வைத்து வாய்காலுக்குள் சிறுமியின் உடலை போட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.


சிறுமி காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாற்றம்


சிறுமி  கடந்த சனிக்கிழமை அன்று மதியம் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமி மாயம், கடத்தப்பட்டிருக்கலாம் என்கிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், சிறுமி நேற்றைய தினம் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து தற்போது அவ்வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றம் செய்துள்ளனர். மேலும் சிறுமியை கொலை செய்த இருவர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும், பிரேத மருத்துவ அறிக்கை வந்த பிறகே போக்சோவில் எந்த பிரிவின் கீழ் வழக்கு பதியப்படும் என்பது தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


சமூக ஆர்வலர்கள் போராட்டம் 


புதுச்சேரி சிறுமி கொலை விவகாரத்தில் நீதி வழங்க கோரி  இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கடற்கரை காந்தி சிலை முன்பு போராட்டம் செய்து வருகின்றனர். சிறுமியை கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பள்ளியில் நினைவு அஞ்சலி


இந்த நிலையில், புதுச்சேரி சவரிராயலு நாயகர் அரசு பள்ளி மாணவிகள் சிறுமிக்கு நினைவஞ்சலி செலுத்தினர். சிறுமியின் உருவப்படத்துக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றி மெளன அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் இனிமேல் எங்கும் நடைபெறக்கூடாது என மாணவிகள் தங்களது ஆதங்கத்தை தெரியப்படுத்தினர். சிறுமியின் இறப்புக்கு மாணவிகள், ஆசிரியர்கள் இறங்கல்பா வாசித்தனர்.