விழுப்புரம்: விழுப்புரம் நீதிமன்றத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தனக்கும் கஞ்சா கடத்தலுக்கும் சம்பந்தமில்லை என கூச்சலிட்டவாரே நீதிமன்றத்திற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி அருகே டாரஸ் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு உதவி ஆய்வாளர் செந்தில்முருகன், தலைமையிலான போலீசார் சுங்கசாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த டாரஸ் லாரியை மடக்கி, சோதனை செய்தபோது லாரியில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், டாரஸ் லாரி டிரைவரான விருதுநகர் மாவட்டத்தினை சார்ந்த ராஜ்குமார், கிளீனர் அருண்குமார் ஆகிய இருவரும் இணைந்து டாரஸ் லாரியில் பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு கொல்கத்தாவில் இருந்து மதுரைக்கு செல்லும் லாரியில் விஜயவாடா அடுத்த அன்னபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு உள்ள பெட்டிக் கடையிலிருந்து 8 கிலோ கஞ்சா பண்டல்களை ஏற்றிக்கொண்டு துாத்துக்குடியில் உள்ள பாரதி என்பவருக்கு கொடுப்பதற்காக கடத்திச் சென்றது தெரியவந்தது.

 

இதனையடுத்து, ரோந்து பிரிவு போலீசார், கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா, லாரி டிரைவர், கிளீனர் ஆகியோரை கைது செய்து உளுந்துார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கஞ்சா கடத்தல் வழக்கில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்குமார், அருண் குமாரை கைது செய்தனர். இந்த நிலையில் கஞ்சா கடத்தலில் தகவல் அளித்த முருகனையும் 8 கிராம் கஞ்சா பாக்கெட்டுடன் போலீசார் கைது செய்தனர். இந்த கஞ்சா கடத்தலில் முருகன், ராஜ்குமார், அருண்குமார் ஆகியோர் இணைந்து செயல்பட்டபோது முருகனுக்கும் ராஜ்குமாருக்கும் பணம் பிரிப்பதில்  ஏற்பட்ட பிரச்சனையில் கஞ்சா கடத்தலை முருகன் போலீசாருக்கு தகவல் கொடுத்தது அம்பலமானது.

 

இவ்வழக்கில் மூவரையும் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்த வந்தபோது முருகன் தனக்கும் கஞ்சா கடத்தலுக்கும் சம்பந்தமில்லை தன்னை தேவையில்லாமல் 8 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் சேர்த்துவிட்டதாகவும் இதனால் தனது மனைவி மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்துகொள்வார்கள் என்று கூச்சலிட்டவாரே விழுப்புரம் நீதிமன்றத்திற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூவரையுமே சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.