செஞ்சி அருகே நண்பனின் பிறந்தநாளை கொண்டாட சென்ற போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டி சென்ற அவருடைய நண்பர் கஞ்சா போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர் நகர் 13-வது தெருவை சேர்ந்தவர் திருமால். இவருடைய இளைய மகன் சீனிவாசன்(20) தெள்ளார் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவருடைய நண்பரான எம்.ஜி.ஆர் நகர் 14-வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகனான தனியார் கொரியர் சர்வீஸில் வேலை செய்து வரும் பிரபு (20) ஆகிய இருவரும் நேற்று மாலை நண்பருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
சீனிவாசனுக்கு சொந்தமான விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை பிரபு ஓட்டினார். செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை அருகே சென்று கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற சீனிவாசன் சாலை ஓரமாக சிமெண்ட் கலவையால் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் அதிர்ஷ்டவசமாக பிரபு காயமின்றி உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் கல்லூரி மாணவர் சீனிவாசன் உடலை கைப்பற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரபு கஞ்சா போதையில் இருந்த நிலையில் செஞ்சி அரசு மருத்துவமனையில் தன்னுடைய கழுத்தை பாட்டிலால் குத்தி தற்கொலைக்கு முயன்றார். பிரபு ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்ட அவருடைய சக நண்பர்கள் அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நண்பரின் பிறந்தநாளை கொண்டாட விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றபோது, நிலை தடுமாறி விழுந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலியான நிலையில் அவருடைய நண்பர் கஞ்சா போதையில் தற்கொலைக்கு முயன்றது செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.