விழுப்புரம்: ஆபத்தான நிலையில் உள்ள நோயாளி கைரேகை வைத்தால் தான் மருத்துவ காப்பீடு அட்டை தருவேன் என அதிகாரிகள் கூறியதால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியை மகன் அழைத்து வந்தபோது ஆட்சியர் அலுவலக வாயிலில் மூதாட்டி மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


விக்கிரவாண்டி அருகேயுள்ள பெரிய தச்சூர் கிராமத்தை சார்ந்த இந்திராணி என்ற மூதாட்டிக்கு முதுகு தண்டுவட பிரச்சனையால் முண்டியம்பாக்கம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அறுவை சிகிச்சைக்காக மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டையை மருத்துவமனை நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர். மூதாட்டிக்கு மருத்துவ காப்பீடு அட்டை இல்லை என்பதால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு பதிவு செய்த போது மூதாட்டி கைரேகை வைத்ததால் தான் மருத்துவ காப்பிடு அட்டை வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து மூதாட்டியின் மகன் பரசுராமன் ஆபத்தான நிலையில் வலியால் அவதிபட்டு கொண்டிருந்த மூதாட்டியை காரில் அழைத்து கொண்டு விழுப்புரம்  ஆட்சியர் அலுவலக மருத்துவ காப்பீடு அலுவலகத்திற்கு  அழைத்தார். மருத்துவ காப்பீடு அலுவலக வாயிலில் காரில் இருந்து மூதாட்டியை இறக்கிய போதே உடல்நலம் பாதிக்கபட்டிருந்த மூதாட்டி மயங்கி விழுந்தார். இதனையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கபட்டவுடன் ஆம்புலன்ஸ் மூலமாக ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.