விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் 25 ஆண்டுகள் நிறைவு செய்து வெள்ளி விழா கண்டுள்ளது. பெயரில் மட்டுமே புதிய பேருந்து நிலையம் என உள்ளதே தவிர மற்றபடி, எந்த ஒரு புதிய மாற்றமோ வளர்ச்சியோ பேருந்து நிலையத்தில் இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பேருந்து வசதிகளை கொண்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பேருந்துநிலையங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதனிடையே தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்துசெல்கின்றனர். முகூர்த்தநாட்கள், பண்டிகை நாட்களில் வழக்கத்தைவிட பயணிகள்கூட்டம் அதிகமாக காணப்படும்.
25 ஆண்டுகள் நிறைவு
இவ்வளவு சிறப்பு மிக்க விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் 25 ஆண்டுகள் நிறைவு செய்து வெள்ளி விழா கண்டுள்ளது. பெயரில் மட்டுமே புதிய பேருந்து நிலையம் என உள்ளதே தவிர மற்றபடி, எந்த ஒரு புதிய மாற்றமோ வளர்ச்சியோ பேருந்து நிலையத்தில் செய்யவில்லை. இந்தப் புதிய பேருந்து நிலையம் விழுப்புரத்தின் அடையாளமாக இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்தால் தென் மற்றும் வட மாவட்டங்களில் பயணம் செய்பவர்கள் அதிகம் பயன் பெறுகிறார்கள்.
பேருந்து நிலையத்தை சுற்றி ஐந்து கிலோமீட்டர் உள்ள பகுதிகளின் வளர்ச்சி மிக அதிகம், முக்கியமாக வியாபாரிகள் அதிகம் பயனடைந்துள்ளனர். அதேபோன்று கிராமத்தில் இருந்து விழுப்புரத்திற்கு வருகை தரும் மக்கள் தங்களின் தேவையை பூர்த்தி செய்ய ஒரே இடத்தில் அரசு அலுவலகங்கள் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது.
25 ஆண்டுகள் பிறகும் ஏரி தனது நிஜ முகத்தை காட்டுகிறது
25 ஆண்டுகளுக்கு முன் ஏரியாக இருந்த பகுதியில் பேருந்து நிலையம் பெருந்திட்ட வளாகம் அமைத்து விழுப்புரத்தில் புதிய அடையாளமாக மாற்றினாலும் 25 ஆண்டுகள் பிறகும் ஏரி தனது நிஜ முகத்தை அவப்போது காட்டிக் கொண்டு தான் உள்ளது. மழை பெய்தால் போதும் அடுத்த பத்து நிமிடத்தில் ஏரியில் நீர் தேங்கி நிற்பது போல் கட்சி அளிக்கும். இதற்கு சரியான வடிகால் வசதிகள் கிடையாது என்பது தான் உண்மை.
பேருந்து நிலையதில் தண்ணீர் தேங்காதவாறு தண்ணீர் செல்ல வழிவகையை அரசு சிறப்பாக செய்ய வேண்டும். பேருந்து நிலையத்திற்கு அடிப்படை தேவைகள் வசதிகள் அதிகம் தேவைப்படுகிறது. அதேபோல், நடைபாதைகளை ஆக்கிரமித்து ஒருபுறம் கடைகளை வைத்துள்ளதால் பயணிகள் நடந்துசெல்வதற்கே வழியில்லை. பழக்கடைகள், ஸ்வீட், ஜூஸ்கடைகள் உள்ளிட்ட கடைகளை வைத்து பயணிகளுக்கு வழிவிடாமல் உள்ளனர். நகரபேருந்துகள் நிற்கும் பகுதியில் நடைபாதையையும் தாண்டி பேருந்துகள் வந்து நிற்கும் பகுதியிலும் இந்த ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, செஞ்சி மார்க்கத்தில் நடைபாதையில் இருசக்கரவாகனங்கள் அணிவகுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக, பயணிகள் நடந்து செல்ல வழியில்லாமல் கடும்வெயிலில் நடந்து சென்று காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, காவல்துறை பலமுறை நடவடிக்கை எடுத்தும் பலனில்லை. பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன பார்கிங் இருந்தும், அதில் வாகனத்தை நிறுத்தாமல், பொதுமக்கள் செல்லும் வழிகளில் நிறுத்தி வைப்பதால் அவதி அடைந்து வருகின்றனர்.
அதேபோல், பேருந்து நிலையத்தின் உள்ளே இருக்கும் உணவகங்களின் விலை, தரத்தை முறையாக ஆய்வு செய்ய வேண்டும், இரவு நேரங்களில் பாலியல் தொல்லைகள், வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாதவாறு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலையம் முறையாக பராமரிப்பு செய்து விளம்பரம் இன்றி ஓவியங்களால் அழகு செய்தால் இன்னும் அழகாக காட்சியளிக்கும்.