புதுச்சேரி அருகே திருக்கனூரில் சாக்குப் பையில் துண்டிக்கப்பட்ட வாலிபரின் 'கை' கிடந்த சம்பவத்தில், வாலிபர் கொடூரமாக வெட்டி கொலை செய்தது அம்பலமானது. இது தொடர்பாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.
சாக்குப் பையில் துண்டிக்கப்பட்ட வாலிபரின் 'கை'
புதுச்சேரி திருக்கனூர் போலீசார் கடந்த 15ம் தேதி நள்ளிரவு, கொடாத்துார் மணவெளி பகுதியில் ரோந்து சென்றனர். அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 வாலிபர்களை நிறுத்தினர். போலீசாரை கண்டதும், இருசக்கர வாகன் மற்றும் சாக்குமூட்டையை போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். சாக்குமூட்டையில் ரத்தம் சொட்ட சொட்ட துண்டிக்கப்பட்ட கை இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்கள் விட்டு சென்ற பைக் பதிவெண்ணை கொண்டு விசாரித்ததில், கண்டமங்கலம் அருகே எஸ்.ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேரந்த பாஞ்சாச்சரம் மகன் தட்சணாமூர்த்தி (எ) பாபு, (20) திருமங்கலம், வடக்குப்பாளைம் முருகன் மகன் ரோஹித்,( 20) என, தெரிந்தது. இருவரையும், போலீசார் கைது செய்து விசாரித்ததில், கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் வாலிபரை வெட்டி கொலை செய்து, உடலை புதரில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
தட்டிகேட்டதால் தகராறு
மேலும் விசாரணையில், புதுச்சேரி செல்லிப்பட்டை சேர்ந்தவர் மணி மகன் ஆதிநாராயணன், 33 மது பழக்கம் உடைய ஆதிநாராயணன், கடந்த 15ம் தேதி இரவு 10 மணிக்கு, பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து கண்டமங்கலம் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது, கண்டமங்கலம்- வானூர் சாலையில், பெரியபாபுசமுத்திரம் அய்யனார்கோவில் அருகே சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தட்சணாமூர்த்தி, அவரது நண்பர் ரோஹித் இருவரும் மது அருந்தியுள்ளனர். அந்த வழியாக வந்த ஆதிநாராயணன் சாலையோரம் நிறுத்தி இருந்த வாகனத்தின் மீது அமர்ந்துள்ளார்.
இதனை, தட்சணா மூர்த்தி, ரோஹித் இருவரும் தட்டிகேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி, ரோஹித் இருவரும் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் ஆதி நாராயணனை சரமாரியாக வெட்டினர். இதில் ஆதிநாராயணன் வலது கை துண்டாகி கிழே விழுந்ததுடன், சம்பவ இடத்திலே இறந்தார். ஆதிநாராயணன் உடலை இழுத்து சென்று, சித்தேரி பகுதியில் அடர்ந்த புதர்களுக்குள் வீசிவிட்டு, செடி கொடிகளை அதன் மீது வைத்து மூடியுள்ளனர்.
இருசக்கர வாகனத்தை எடுக்க வரும் போது, துண்டிக்கப்பட்டகை மட்டும் அங்கு கிடந்தது. கையை வேறு ஏதேனும் இடத்தில் வீசிவிடலாம் என, அருகில் கிடந்த சாக்கு பையில் வைத்து கொண்டு பைக்கில் புறப்பட்டனர். திருக்கார் கொடாத்துார் மணவெளி அருகே சென்றபோது போலீசார் வருவதை கண்டு பைக் மற்றும் சாக்குபையை வீசி தப்பிச் சென்றது தெரியவந்தது. துண்டான கையில் ஆதி என பச்சை குத்தப்பட்டு இருந்ததால் கொலையானவர் யார் என்பது எளிதில் அடையாளம் காணப்பட்டது.
புதரில் மறைந்து வைத்திருந்த ஆதிநாராயணன் உடல்
கைதான இருவர் அளித்த வாக்குமூலத்தின் படி, நேற்று காலை 10:30 மணிக்கு தட்சணாமூர்தி, ரோஹித் இருவரையும் திருக்கனூர் போலீசார் தமிழக பகுதியான பெரியபாபுசமுத்திரம் அழைத்துச் சென்றனர். புதரில் மறைந்து வைத்திருந்த ஆதிநாராயணன் உடலை அடையாளம் காட்டினர். அப்போது, விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன், கண்டமங்கலம் ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் இரு மாநில போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலை வழக்கில் துண்டிக்கப்பட்ட கையை கைப்பற்றி வழக்குப் பதிந்து, கொலையாளிகள் இருவரையும் புதுச்சேரி மாநிலம், திருக்கனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத் துவதால், தமிழக பகுதியில் மீட்கப்பட்ட உடலை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
இடது மார்பில் 20 முறை கத்தியால் குத்தி சிதைத்து கொடூரமாக கொலை
அதன்படி, புதுச்சேரி தடயவியல் நிபுணர் சினேகா தலைமையிலான குழுவினர் ஆதிநாராயணன் உடலில் இருந்து தடயங்களை சேகரித்தனர். அப்போது ஆதிநாராயணன் வலது கையை துண்டாக வெட்டியதுடன், அவரது முகத்தை சுத்தியால் வெட்டி சிதைத்து, இடது மார்பில் 20 முறை கத்தியால் குத்தி சிதைத்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது. திருக்கனூர் காவல் ஆய்வாளர் ராஜகுமார், உதவி ஆய்வாளர் பிரியா ஆகியோர், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.