விழுப்புரம் அருகேயுள்ள கொங்கராயனூர் அருளவாடி இடையே செல்லும் தென்பெண்ணை ஆற்று தரைப்பாலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை தொடங்கிய கடந்த 29-ந் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. நேற்று பெய்த அடை மழையால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சாத்தனூர் அணையில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர் அடித்துச்செல்லப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த  ராமு என்பவர் தனது கிராமம் அருகேயுள்ள அருளவாடி கிராமத்தில் நிலம்  உழுவதற்காக தனது டிராக்டர் எடுத்துக்கொண்டு கொங்கராயனூர் அருளவாடி இடையேசெல்லும் தென்பெண்ணை ஆற்றின் வழியாக சென்றுள்ளார். அப்போது பருவமழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்து செல்வதன் காரணமாக தரைபாலத்தின் மேல் வெள்ள நீர் சென்று கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல் டிராக்டரை எடுத்து கொண்டு சென்றுள்ளார்.


அப்போது தரைப்பாலத்தின் எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு  வழி விடுவதற்காக டிராக்டர் ஒதுங்கும்போது டிராக்டரின் சக்கரங்கள் எதிர்பாராத விதமாக ஆற்றில் இறங்கி கவிழ்ந்துள்ளது. அப்போது ராமு ஆற்றில் மூழ்கி காயம் அடைந்ததை அடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ள கிராமபொதுமக்கள் தரைப்பாலம் உள்ள  இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும்  கோரிக்கை வைத்துள்ளனர்.