கடலூர் அருகே உள்ள உண்ணாமலைசெட்டி சாவடி, விசாலி நகரை சேர்ந்தவர்,பாஞ்சாலம் வயது (59). இவரது மகன் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதிய நிலையில் முடிவுக்காக காத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் பாஞ்சாலத்துக்கு கடலூர் முதுநகர் அருகே உள்ள காரைக்காடு பகுதியை சேர்ந்த கர்ணன்,பரமகுரு மற்றும் டாக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

 

இவர்கள் மூன்று பேரும் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ஜெயபால் மனைவி சுகந்தி என்பவரை பாஞ்சாலத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். இவர்கள் பாஞ்சாலத்திடம் சென்னையை சேர்ந்த டேனியல் ராஜ் மற்றும் ராஜா ஆகியோர் மூலம் பாஞ்சாலத்தின் மகனுக்கு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். இதை நம்பிய அவர் பல தவணைகளில்  20 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். 

 

ஆனால் அவர்கள் கூறியபடி பாஞ்சாலத்தின் மகனுக்கு வேலை வாங்கித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்களிடம் பாஞ்சாலம் கேட்டபோது, மேலும் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் உங்கள் மகனுக்கு வேலை வாங்கி கொடுத்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த 22.12.2021 அன்று சுகந்தியின் நண்பர் விஜயகுமார் என்று அறிமுகப்படுத்தி கொண்ட டேனியல் ராஜ், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் ரூ.1 கோடிக்கு மேல் பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்து பட்டதாக செய்தி தாளில் பார்த்து பாஞ்சாலம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுகந்தியின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டபோது, சுகந்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

 இதையடுத்து பாஞ்சாலம் இது குறித்து நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசனிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், கடலூர் மாவட்ட குற்றபிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் ஆனந்தன், தலைமை காவலர் ராஜசேகர், முதல்நிலை பெண் காவலர் கௌரி, சதிஷ்ஸ்ரீ ஆகியோர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர் இந்நிலையில்,

காஞ்சிபுரம் மாவட்டம், கானத்தூர், கோபிகாம்பாள் நகரில் இருந்த சுகந்தியை கைது செய்து, மாவட்ட குற்றபிரிவு அலுவகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், தான் வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்ததை ஒப்பு கொண்டார். கைது செய்யப்பட்ட சுகந்தி மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் 2 மோசடி வழக்குகளும், சென்னையில் 1 மோசடி வழக்கும், வேலூர் மாவட்டம் ஆலங்காயம் காவல்நிலையத்தில் 1 மோசடி வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயபால், டேனியல் ராஜ், ராஜா ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.